ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்த கெர்சன் நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ள நிலையில், ‘ரஷ்ய படைகளை உக்ரைனில் இருந்து வெளியேற்றிக் கொண்டே இருப்பேன்’ என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சபதம் செய்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதில் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றின.
கெர்சன் நகரை மீட்க உக்ரைன் படை கடுமையாக சண்டையிட்டு வந்தது.
இந்த நிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஷ்யா அறிவித்தது. இதையடுத்து அங்கிருந்து ரஷ்ய படைகள் வெளியேறின.
இதுகுறித்து பேசியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டுள்ளோம். அந்நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ளது” என்று கூறினார்.
ரஷ்ய படைகள் வெளியேறியதை அடுத்து கெர்சன் நகருக்குள் உக்ரைன் ராணுவம் நுழைந்தது. மேலும் கெர்சனில் வசித்த மக்களும் அந்நகருக்குள் மீண்டும் வந்தனர். சாலைகளில் குவிந்த மக்கள் உக்ரைனுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
முக்கிய இடங்களில் பறந்த ரஷ்ய கொடிகளை கீழே இறக்கிவிட்டு உக்ரைன் தேசிய கொடியை ஏற்றினார்கள். இது தொடர்பாக வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உக்ரைன் மக்களிடம் ஆற்றிய உரையில்,
‘ரஷ்ய படைகளை உக்ரைனில் இருந்து வெளியேற்றிக்கொண்டே இருப்பேன்’ என்று சபதம் செய்துள்ளார்.
ரஷ்ய கட்டுப்பாடில் உள்ள உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்களிடம் பேசிய அவர், “நாங்கள் யாரையும் மறக்கவில்லை; யாரையும் கைவிட மாட்டோம்.
ரஷ்யப் படைகள் கெர்சனில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பை அழித்தன. எல்லாவற்றையும் மீட்டெடுப்போம்” என்று உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே, கெர்சன் குடியிருப்பாளர்கள் கெர்சனின் விடுதலையைக் கொண்டாடி வருகிறார்கள். அங்கே வந்த உக்ரேனிய படைகளை கெர்சன் குடியிருப்பாளர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர்.
இந்தப் படங்கள் வைரலாகி வருகின்றன. மறுபுறம், ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை உக்ரைன் மீட்டுள்ளதால், ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பிராந்தியத்தில் உள்ள சில பகுதிகளுக்கு ரஷ்யா ஒரு புதிய தற்காலிக தலைநகரை அறிவித்துள்ளது.
‘ஹெனிசெஸ்க்’ நகரம் இப்போது கெர்சனின் பிராந்தியத்தின் தற்காலிக நிர்வாக தலைநகராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-ராஜ்
“அப்பாவை நினைத்து பிரியங்கா என்னிடம் அழுதார்”: நளினி பேட்டி!
டிஎஸ்பி: பணம் போட்ட சன் பிக்சர்ஸ் பெயர் போடாதது ஏன்?