ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோ விமான நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது நேற்று மூன்று உக்ரைன் டிரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. எஞ்சிய இரண்டு டிரோன்களும் மின்னணு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டது. அந்த டிரோன்கள் மாஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மைய கட்டடம் மீது மோதி வெடித்தது. இதில் இரண்டு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்தத் தாக்குதலில் காவலாளி ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழப்பு எதுவும் இல்லை.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோவில் உள்ள நான்கு விமான நிலையங்களில் ஒரு விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் மாஸ்கோ தெற்குப் புறநகரில் உள்ள வனுகோவா விமான நிலையத்துக்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு எந்த விமானங்களும் வரவில்லை. எந்த விமானமும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லவில்லை. மேலும் மாஸ்கோ மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது.
உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோ 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலையில் உக்ரைனின் இந்த டிரோன்கள் தாக்குதல் ரஷ்யாவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ராகி சேமியா கிச்சடி