உக்ரைன் அணைகளின் உடைப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் முக்கிய அணையான ககோவ்கா அணையில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இந்த திடீா் உடைப்பு காரணமாக, நதியையொட்டிய 29 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷ்ய ஆக்கிரமிப்புப் படையினா் குண்டுவீசி தகா்த்துள்ளனா்.
இதன் காரணமாக அந்த நதியின் இரு கரைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு உக்ரைனும், ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் இந்த அணைகளின் உடைப்பின் தாக்கம் குறித்து பேசியுள்ள ஐ.நா சபையின் உதவிகளுக்கான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், “இந்தத் தாக்குதல்களால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்.
உணவுப் பொருட்களின் விலை உயர்வும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பிரச்சினைகளும் ஏற்படலாம். கோதுமை, பார்லி, சோளம், ராப்சீட், ராப்சீட் எண்ணெய், சூரியகாந்தி விதை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் மற்றும் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த உடைப்பின் காரணமாக, வரப்போகும் பயிரிடும் காலங்களில் இவற்றை விதைப்பதிலும், அறுவடை செய்வதிலும் மிகப்பெரிய சிக்கல் வருவது தவிர்க்க முடியாதது.
சுமார் ஏழு லட்சம் பேர் வரை குடிநீருக்காக அணைக்குப் பின்னால் உள்ள நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கின்றனர்.
இந்த உடைப்புகளின் காரணமாக சுத்தமான குடிநீர் இல்லாமல் மக்கள் நோய்வாய்ப்படும் வாய்ப்பும், குழந்தைகளுக்கு அதிகமான பாதிப்பும் ஏற்படும்.
ஜெனிவா உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு எதிரான வகையில், சிவிலியன் உள்கட்டமைப்புக்கு எதிராக இந்தப் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. யார் இதை (அணை தகர்ப்பு) செய்திருந்தாலும் ஜெனிவா உடன்படிக்கைகளை மீறியதாகும்” என்று கிரிஃபித்ஸ் கூறியுள்ளார்.
ராஜ்