பிரிட்டன் மற்றும் போலந்து போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது என்று ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி, உக்ரைனை நிலைகுலையச் செய்கிறது.
நேற்று முன்தினம் டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் அழிந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி கைரிலோ திமோஷென்கோ கூறினார்.
இதற்கு உக்ரைன் தரப்பில் பதிலடி கொடுப்பதற்காக கனரக பீரங்கி வாகனங்களை வழங்கும்படி மேற்கத்திய நாடுகளுக்கு கோரிக்கை வைத்தது.
அதன்படி உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்க மேற்கத்திய நாடுகள் ஆலோசித்து வருகின்றன.
முதல் மேற்கத்திய நாடாக கனரக பீரங்கிகளை வழங்க பிரிட்டன் உறுதி அளித்துள்ளது. வரும் வாரங்களில் சக்திவாய்ந்த 14 சேலஞ்சர்-2 பீரங்கிகள் மற்றும் பீரங்கி தாக்குதலுக்கு பயன்படும் நவீன தளவாடங்களையும் அனுப்புவதாக பிரிட்டன் கூறியது. இது ரஷ்யாவை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது.
பிரிட்டன் நாடு தங்களின் ரஷ்ய எதிர்ப்பு இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாக உக்ரைனை பயன்படுத்துவதாக, ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது.
மேலும், பிரிட்டன் உக்ரைனுக்கு அனுப்பும் சேலஞ்சர்-2 பீரங்கிகள், மற்ற கவச வாகனங்களை போன்று தாக்குதலில் தீப்பற்றி எரியும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
பிரிட்டன் மற்றும் போலந்து போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
-ராஜ்
கிச்சன் கீர்த்தனா : இட்லி டிக்கா
”உதயநிதி வந்தது எனக்கு மகிழ்ச்சி!” – பெரியப்பா மு.க.அழகிரி நெகிழ்ச்சி