அதிபர் மாளிகை தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்யா!

Published On:

| By Selvam

அதிபர் மாளிகை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் ரயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில்  21 பேர் பலியாகியுள்ளனர்.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரிம்லினை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டதாகவும் அதிபர் புதினை கொலை செய்ய இரண்டு டிரோன் தாக்குதல் நடந்ததாகவும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் அதிபர் மாளிகையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இந்த டிரோன் தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என்றும் கூறியிருந்த ரஷ்யா, இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியது.

இந்தத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷ்யா தெரிவித்தது.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் மீதும் கர்சன் நகர் மீதும் ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்கியது.

கர்சன் நகர் மீது ரஷ்யா ஏவிய ஏவுகணைகள் ரயில் நிலையம் மற்றும் சூப்பர் மார்க்கெட்டை தாக்கின.

இந்தத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 48 பேர் படுகாயமடைந்தனர்.

கீவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

ரஷ்ய அதிபர் மாளிகை மீது நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல் நடந்த நிலையில் அந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்துள்ளது.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பலாக்கொட்டை மசாலா ரோஸ்ட்