இங்கிலாந்து உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பிற்குப் பிறகு இங்கிலாந்தில் தங்கி வேலை தேடும் பட்டதாரி விசா காலத்தை குறைக்கும் செயல் திட்டத்தை வகுத்துள்ளார்.
அவரது இந்த நடவடிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டிற்கு மாணவர்கள் சென்று கல்வி கற்க எளிதில் விசா கிடைப்பதால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் இங்கிலாந்து சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கிலாந்து அரசானது அந்நாட்டில் பட்டபடிப்பை மேற்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தங்கி வேலை தேடுவதற்கு, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் பட்டதாரி விசா வழங்கி வருகிறது.
இந்த விசா காலத்தை ஆறு மாதங்களாக குறைப்பதற்கு இங்கிலாந்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் வேலை கிடைக்காவிட்டால் அவர்கள் இங்கிலாந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
மேலும், வெளிநாட்டு மாணவர்கள் பிஎச்டி போன்ற முதுகலை ஆராய்ச்சி படித்தால் மட்டுமே தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்து அழைத்து வர அனுமதிக்கும் வகையில் திட்டத்தை வகுக்க உள்ளனர்.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய புள்ளி விவரங்களின் படி, பட்டதாரி விசாவில் அதிகப்படியாக 41 சதவிகிதம் இந்திய மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதனால் இந்திய மாணவர்களுக்கு இது பெரிய சுமையாக அமையும்.
இங்கிலாந்து நாட்டில் 6,80,000 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் இங்கிலாந்தில் உள்ள மாணவர்கள் வேலை வாய்ப்பு பறிபோவதாக கருத்துக்கள் எழுந்தது.
இதனை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்திற்கு கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரிஷி சுனக் உள்துறை மற்றும் கல்வித்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதனடிப்படையிலேயே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு வந்து கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதனால் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் இங்கிலாந்து உள்துறை செயலர் சுயெல்லாவிற்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
அதே நேரத்தில் இங்கிலாந்தில் உள்ள சிறிய பல்கலைக்கழகங்களில் குறுகிய கால படிப்புகளில் படிக்கும் மாணவர்களால் பட்டதாரி விசா அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
இது வெளிநாட்டு மாணவர்கள் இங்கிலாந்தில் அதிகளவில் குடியேறுவதற்கு வழிவகுக்கும். இதனால் பட்டதாரி விசா வழங்கும் முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் ஒரு வருடம் மட்டுமே பட்டதாரி விசா வழங்கப்படுகிறது.
இங்கிலாந்தில் இரண்டு வருடங்கள் பட்டதாரி விசா வழங்குவதால் இங்குள்ள மாணவர்களுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது என்று கல்வித்துறையின் ஒரு தரப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இங்கிலாந்து அரசின் இந்த புதிய விசா கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இங்கிலாந்தில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு இது பெரிய பாதிப்பாக அமையும்.
செல்வம்
பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர் புது உத்தரவு!
ஈரோடு கிழக்கு: அதிமுக படையையே களமிறக்கிய எடப்பாடி