மத்திய பிரதேசம் உஜ்ஜைனில் மக்கள் நெரிசல் மிகுந்த சாலையின் ஓரத்தில், குப்பை சேகரிக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 4), மத்தியப் பிரதேசம் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்த குப்பை சேகரிக்கும் பெண் ஒருவரை, லக்ஷ்மன் என்ற நபர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அவரை தனியாகக் கூட்டிச்சென்று மது அருந்த வைத்துள்ளார்.
பின்னர், கோய்லா பதக் என்ற இடத்தில் உள்ள சாலையின் ஓரமாகக் கூட்டிச்சென்று அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
இதைப் பார்த்த சாலையில் சென்றுகொண்டிருந்த சிலர், அதைத் தடுக்காமல் சம்பவத்தைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
அந்தக் காணொளியைப் பார்த்த உஜ்ஜைன் காவல்துறையினர், அந்த பெண்ணை அழைத்து விசாரித்தனர். அப்போது நடந்த விவரத்தைக் கூறிய அந்த பெண், லோகேஷ் மீது புகார் அளித்திருக்கிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் லோகேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிகழ்வை மத்திய பிரதேசத்தின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கண்டித்துள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி “ நாடு முழுவதும் பாஜக கொல்கத்தா மருத்துவ மாணவியின் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால், இங்கு மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் சொந்தத் தொகுதியிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
முதல்வர் மோகன் யாதவ், மத்திய அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஏன் இது குறித்துப் பேசவில்லை? மத்தியப் பிரதேசத்தில் ‘காட்டாட்சி’ தான் நடக்கிறது. யாருக்கும் இங்குப் பாதுகாப்பு இல்லை” என்று ஏஎன்ஐ-க்கு பேட்டி அளித்துள்ளார்.
இதற்கு மத்தியப் பிரதேச பாஜக கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான வி.டி ஷர்மா, “ காங்கிரஸுக்கு மத்தியப் பிரதேச அரசாங்கத்தைக் குறை கூறுவதற்கு எந்த விஷயமும் கிடைக்கவில்லை. அதனால் தான் இந்த சம்பவத்தை இப்படிப் பேசி வருகிறது.
மத்திய பிரதேசத்தின் பாஜக அரசு தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபருக்கு முதன் முதலில் மரண தண்டனை கொடுப்பதற்கான சட்டத்தை இயற்றியது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது மத்திய பிரதேச அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் மத்திய பிரதேச அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வெறுத்து ஒதுக்கிய பெயர்… தவிர்க்க முடியாததாக மாறியது எப்படி? – மம்முட்டிக்கு 73 வயது!
அமெரிக்காவில் இருந்து அரசு பணி : ஸ்டாலின் ட்வீட்!
இறங்கிய தங்கம் விலை… இன்றைய நிலவரம்!