இந்தியாவில் முதன்முறையாக உபேரின் நீர்வழிப் போக்குவரத்து சேவை!
உலகின் பல நாடுகளிலும் போக்குவரத்து துறை சார் சேவை அளித்து வரும் முன்னணி நிறுவனமான உபேர், இந்தியாவில் முதன்முறையாக நீர்வழிப் போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது.
உபேர் செயலி மூலம் இனி, கார், ஆட்டோ, பைக் சேவை மட்டுமல்லாது, படகு சேவையையும் புக் செய்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரின் ‘தல்’ ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக ‘உபேர் ஷிகாரா’ என்ற பெயரில் படகு போக்குவரத்து சேவையை உபேர் நிறுவனம் தொடங்கியுள்ளது.
காஷ்மீரின் பாரம்பரியமிக்க இந்த ஷிகாரா படகு சவாரி செய்ய விரும்புவோர், உபேர் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உபேர் ஷிகாரா படகு சவாரிக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதிகபட்சமாக 15 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணமே இந்த படகு சவாரிக்கு வசூலிக்கப்படுகிறது. வசூலிக்கப்படும் கட்டணம் முழுவதும் படகுகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கே சென்று சேரும் என்றும், உபேர் நிறுவனத்தால் சேவைக் கட்டணத் தொகை பிடித்தம் செய்து கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தல்’ ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக சுமார் 4,000 ஷிகாரா படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஆசியாவிலேயே முதன்முறையாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் வெனிஸ் நகரில் இதே பாணியில் படகுப் போக்குவரத்து சேவை சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது காஷ்மீர் செல்வோரும் ஷிகாரா படகு சவாரியில் உபேர் மூலம் எளிதாக பயணிக்கலாம்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: பெரிதான மார்பகங்களுடன் ஆண் பிள்ளைகள்… தீர்வு உண்டா?
ஹெல்த் டிப்ஸ்: மழை நாட்களில் ஐஸ்க்ரீம்… சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
டாப் 10 செய்திகள்: பள்ளிகளுக்கு விடுமுறை முதல் அதிமுக போராட்டம் வரை! !
கிச்சன் கீர்த்தனா: வரகு அரிசி அடை!