பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 8 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்ச நீதிமன்றம் நேற்று (மே 22) ரத்து செய்தது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சூழ்ச்சி செய்ததாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களில் 2022ல் சோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த அமைப்பைச் சேர்ந்த பரகத்துல்லா, இத்ரீஸ், முகமது அபுதாஹிர், காலித் முகமது, சையத் இஷாக், காஜா மொஹைதீன், யாசர் அராபத் மற்றும் ஃபயாஸ் அகமது உள்ளிட்ட 8 பேர் 2022ஆம் ஆண்டு உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் விசாரணை கைதியாக சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து, ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த 2023 அக்டோபர் 19ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு ஜாமீன் வழங்கியது.
இதை எதிர்த்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நேற்று (மே 22) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது என்.ஐ.ஏ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஜத் நாயர் , “குற்றச்சாட்டின் தீவிரத்தை மதிப்பிட தவறி சென்னை உயர் நீதிமன்றம் தவறான உத்தரவை பிறப்பித்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவைச் சேர்ந்த இந்த 8 பேர் மீதான குற்றத்தின் தன்மை உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ளும்போது, சென்னை உயர் நீதிமன்றம் இவர்களுக்கு கனிவு காட்டியிருக்கக் கூடாது.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள குற்றங்களில் இவர்களுக்கு முதல்கட்டமாக தொடர்புள்ளது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.
தேசிய பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. பயங்கரவாத செயலுக்கு துணை போகும் எந்த நடவடிக்கையும் தடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த 8 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. இவர்கள் உடனடியாக சரணடய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!
“கண்மணி அன்போடு” : மஞ்சும்மல் பாய்ஸ்க்கு இளையராஜா செக்!
உச்ச நீதி மன்றத்திற்கு யாரும் fire விடலையா!☺☺☺☺☺