கர்நாடகாவில் பெண் அதிகாரிகளுக்கு இடையேயான மோதல் விவகாரத்தில் ரோகினி சிந்துரி ஐஏஎஸ் மற்றும் ரூபா ஐபிஎஸ் ஆகிய இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து அம்மாநில அரசு இன்று (பிப்ரவரி 21 ) உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்ததாகவும் இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும், ரோகினி சிந்துரி அந்தரங்க புகைப்படங்களை ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வாட்சாப்பில் அனுப்பியதன் மூலம் சேவை நடத்தை விதிகளை மீறியதாக அவர் கூறினார்.
“இப்படிப்பட்ட படங்களை ஆண் மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பினால் என்ன அர்த்தம்? இது தனிப்பட்ட விஷயம் அல்ல. இப்போதுதான் இந்தப் படங்களைப் பார்க்க முடிந்ததால் இந்தப் படங்களை இப்போது வெளியிடுகிறேன். முன்பே கிடைத்திருந்தால், முன்னரே வெளியிட்டிருப்பேன். இது தனிப்பட்ட விஷயம் அல்ல என்று ஐபிஎஸ் அதிகாரி ரூபா கூறினார்.

ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரை மனநோயாளி என விமர்சித்தார் ரோகினி சிந்துரி மேலும் ரூபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
நேற்று (பிப்ரவரி 20 ) கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, இரண்டு அதிகாரிகளின் மோசமான நடத்தை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்த நிலையில் இன்று ( பிப்ரவரி 21) ரோகினி சிந்துரி ஐஏஎஸ் மற்றும் ரூபா ஐபிஎஸ் ஆகிய இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“தமிழை நாம் தொலைத்து வருகிறோம்”: ராமதாஸ்
எல்லா இடங்களிலும் உன்னைத் தேடுகிறேன் அம்மா… ஸ்ரீதேவி மகள் உருக்கம்!