மல்யுத்த வீரர்களின் தொடர் போராட்டத்தினைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு பாஜக எம்.பி.பிரிஜ் பூஷன் சிங் மீது போக்சோ உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்த மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் மத்திய அரசு உறுதி அளித்தபடி 3 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக கடந்த 23ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் சாலையில் அமர்ந்து,
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜரங் புனியா ஆகியோர் தலைமையில் மீண்டும் போராட்டம் துவங்கியது.
தொடர்ந்து ஒருவார காலமாக அவர்கள் போராடி வரும் நிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும், கபில்தேவ், சானியா மிர்சா, நீரஜ் சோப்ரா, சேவாக் உள்ளிட்ட நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே குற்றஞ்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்தனர்.
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த டெல்லி காவல்துறை தரப்பு, உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்தது.
அதன்படி, பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நேற்று (ஏப்ரல் 29) டெல்லி கன்னோட் பிளேஸ் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டாலும்,
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்யப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வினேஷ் போகத் கூறுகையில், “இந்த சம்பவத்தில் டெல்லி காவல்துறையை நாங்கள் நம்பவில்லை.
பிரிஜ் பூஷன் மீது எப்ஐஆர் பதிவு செய்வதற்காக இந்த போராட்டம் நடத்தப்படவில்லை.
85 புகார்கள் உள்ள பாலியல் குற்றவாளியான அவரை கைது செய்வதற்கான போராட்டம் இது. அதன்படி பிரிஜ் பூஷனை சிறையில் அடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங், “நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
நான் எங்கும் ஓடவில்லை. நான் என் வீட்டில் இருக்கிறேன். என் மீது வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறைக்கு ஒத்துழைப்பேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே நீதி கேட்டு போராட்டம் நடத்திவரும் வீராங்கனைகளுக்கு ஆதரவாக #IStandWithMyChampions என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்நாடு முழுவதும் விடுமுறை தொடங்கியது!
பேனா நினைவுச் சின்னத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி!