இரண்டாயிரம் வருடத்தின் தொடக்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவன் தனது தந்தையிடம் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கித் தருமாறு நச்சரித்துக் கொண்டிருந்தார்.
அந்த காலக்கட்டத்தில் மிடில் கிளாஸ் குடும்பங்களால் நினைத்துப் பார்க்க முடியாத விலையில் விற்றுக்கொண்டிருந்த கம்ப்யூட்டரை அவனது தந்தையை வாங்க வைக்க அந்த இளைஞன் மிகவும் மெனெக்கெட வேண்டியிருந்தது.
மகனின் ஆசைக்காக கம்ப்யூட்டரை வாங்கிக் கொடுத்த அந்த தந்தைக்கு அப்போது தனது மகன் இன்னும் இருபது வருடங்களில் உலகின் மிகப்பெரிய பணக்காரருக்கு வழிகாட்டியாகச் செயல்படப் போகிறான் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், இன்று உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நபராக வளர்ந்து நிற்கிறார் அந்த இளைஞர். அவர் தான் ஸ்ரீராம் கிருஷ்ணன்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல அதிரடியான நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டுள்ளார். டீல் முடிந்த நிமிடமே அந்நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தது தொடங்கி ப்ளூ டிக்கிற்கு பணம் வசூலிப்பது வரை அவரது அதிரடி ஐடியாக்கள் பிரேக்கிங் செய்திகளாக அலறிக்கொண்டிருக்கின்றன.

பராக் அகர்வாலை நீக்கிவிட்டால் ட்விட்டரை யார் கவனித்துக் கொள்வது? என்கிற கேள்வி உங்களுக்கும் எனக்கும் மட்டும் அல்ல உலகம் முழுவதும் எதிரொலித்தது. அந்தக் கேள்விகளுக்கு விடை தான் ஸ்ரீராம் கிருஷ்ணன் எனும் தமிழன்.
சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தான் இளங்கலை தொழில்நுட்ப பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். 18 வயது இருக்கும் போது தந்தையை நச்சரித்து கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கிக் கொண்ட ஸ்ரீராம் கிருஷ்ணன் அதன் பிறகு பழைய புத்தகக் கடைகளை தேடி அலைந்து ஏறி இறங்கி உள்ளார். அங்கு கிடைத்த கோடிங்(CODING) புத்தகங்களை புரட்டிப் புரட்டிப் படித்த ஸ்ரீராம் கிருஷ்ணன் பின்னர் பிளாக்(BLOG) ஒன்றை தொடங்கி தொழில்நுட்பம் குறித்து எழுதி வந்துள்ளார்.
2003-ம் ஆண்டின் போது இந்தியாவில் இயங்கி வந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கிளையின் கண்ணில் ஸ்ரீராம் கிருஷ்ணனின் பிளாக்(BLOG) பதிவுகள் சிக்கியுள்ளன. அப்படித் தான் ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு அதிர்ஷ்டம் அளித்தது.
ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்வந்தது. அப்போது கல்லூரி படிப்பை கூட முடித்திருக்காத ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு 20 வயதிலேயே புராடெக்ட் மேனேஜர்(PRODUCT MANAGER) பதவியை கொடுத்து அழகு பார்த்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
2002-ம் ஆண்டு ஸ்ரீராம் கிருஷ்ணனின் நண்பர் ஒருவர் இணையதளப்பக்கம் ஒன்றை உருவாக்குவதற்காக அவரது உதவியை நாடியுள்ளார்.
அப்போது, யாஹூ(YAHOO) சாட் ரூமில் ஆர்த்தி ராமமூர்த்தி என்பவரை அவரது நண்பர் அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் ஆர்த்திக்கும் மைக்ரோசாஃப்டில் வேலை கிடைத்துள்ளது. இருவரும் மைக்ரோசாஃப்ட் அலுவலகமே கதி என கிடந்து பணிபுரிந்துள்ளனர். அதன் பிறகு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.
2005-ம் ஆண்டு வாக்கில் இருவரையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். சிலிக்கான் வேலியில் கூடுதலாக இரண்டு இந்தியர்களும் இணைந்துகொண்டனர். ஆரம்பத்தில் அலுவலகத்திற்கு எதிரிலேயே தங்கவைக்கப்பட்ட ஸ்ரீராம் கிருஷ்ணன் அமெரிக்க சாலையை கடக்கத் தெரியாமல் எதிரே உள்ள அலுவலகத்தை பார்த்தபடி 40 நிமிடங்கள் வரை காத்துக்கிடந்துள்ளார்.
பின்னர் சாலையைக் கடந்த அவர் சிலிக்கான் வேலியிலும் ஏற்றம் கண்டார். 5 ஆண்டுகள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் அதன் பிறகு ஃபேஸ்புக், யாஹூ, ஸ்னாப், ட்விட்டர் என சிலிக்கான் வேலியில் கொடிகட்டிப் பறக்கும் பல முன்னணி நிறுவனங்களில் வேலை செய்துள்ளார். தற்போது ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ் (Andreessen Horowitz) நிறுவனத்தின் ஜெனெரல் பார்ட்னராக (GENERAL PARTNER) உள்ளார்.
2020-ம் ஆண்டு இறுதியில் உலகமே கொரோனா ஊரடங்கில் முடங்கிப்போய் கிடந்த நேரத்தில் கிளப் ஹவுஸ் மூலமாக தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான்களிடம் கலந்துரையாடலை நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்தார் ஸ்ரீராம் கிருஷ்ணன். எலான் மஸ்க் கலந்துகொண்ட நிகழ்ச்சியை மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் கேட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்த போது எலான் மஸ்கை சந்திக்கும் வாய்ப்பு ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது.
அந்த நட்பு தான் கிளப் ஹவுஸில் ஆரம்பித்து ட்விட்டரை நிர்வகிக்க ஐடியா கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன் ட்விட்டரை நிர்வகிக்க எலான் மஸ்க்குக்கு தான் உதவி வருவதாகவும் இந்த நிறுவனம் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்றும் கூறியுள்ளார்.
அலுவலகப் பணி மட்டும் அல்லாமல் தனது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் சேர்ந்து தி குட் டைம் ஷோ என்கிற பெயரில் யூடீயூபில் அவர் தொகுத்து வழங்கிய நேர்காணலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பெரும்புள்ளிகள் பங்கேற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
2005-ல் அமெரிக்காவின் சாலையை கடக்க தெரியாமல் 40 நிமிடங்கள் காத்துக்கிடந்த அந்த இளைஞர் 2022-ல் உலகமே அண்ணாந்து பார்க்கும் உயரத்திற்கு வளர்ந்திருக்கிறார். தொழிலை பேஷனாக பார்ப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை துரத்தி துரத்தி எட்டிப் பிடித்திருக்கிறார் ஸ்ரீராம் கிருஷ்ணன்.
அப்துல் ராஃபிக்
இரண்டு நாள் மழையில் இற்றுப்போன தமிழகம்: எடப்பாடி
ஏவுகணை சோதனை: வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்த தென்கொரியா!