துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி, சிரியாவின் எல்லை பகுதிகளில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான உயிர்களையும் வீடுகளையும் சூறையாடிய நிலநடுக்கத்தின் தாக்கங்கள் இன்னும் குறையவில்லை.

பிரான்ஸ், மால்டா, ரஷ்யா, இஸ்ரேல், இந்தியா உள்ளிட்ட நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, துருக்கியில் 12,391 பேரும், சிரியாவில் 2,992 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பலி எண்ணிக்கையானது தொடர்ந்து உயரும் வாய்ப்புள்ளது.
இதனால் இரண்டு நாடுகளும் பொருளாதார உதவியை நாடியுள்ளன. துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக வரும் மாதங்களில் சிறப்பு நன்கொடையாளர் மாநாட்டை நடத்த உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் துருக்கிக்கு 3.5 மில்லியன் யூரோ மற்றும் சிரியாவிற்கு 3 மில்லியன் யூரோ நிவாரணம் வழங்கியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் துருக்கி மற்றும் சிரியாவிற்கு மருத்துவப் பொருட்களுடன் நிபுணர் குழுக்கள் மற்றும் விமானங்களை அனுப்பியுள்ளது. உயிரிழப்பானது 20 ஆயிரத்தை தாண்டும் என்றும் தற்போது 53 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 3 மில்லியன் டாலர் நிவாரணமாக வழங்கியுள்ளது.
நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் சமூக வலைதளங்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்தநிலையில், விரைவில் ட்விட்டர் பயன்பாடு செயல்பாட்டிற்கு வரும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஓசூரில் ஏன் விமான நிலையம் அமைக்க முடியாது? திமுக எம்.பி கேள்வி!