துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கடந்த 6 ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம் இரு நாடுகளிலும் பெறும் பாதிப்பை ஏற்படுத்தியது. நிலநடுக்கம் ஏற்பட்டது முதல் மீட்புப் பணிகள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நேற்று (பிப்ரவரி 7) மாலை பலி எண்ணிக்கை 5,500-ஐ கடந்த நிலையில் இன்று (பிப்ரவரி 8) காலை 8 மணி நிலவரப்படி பலி எண்ணிக்கை 8,000-ஐ கடந்துள்ளது.
இரு நாடுகளிலும் சுமார் 42 ஆயிரம் பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் கட்டட இடிபாடுகளில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் 3 மாதங்களுக்கு அவசரக்கால நிலையை பிரகடனப்படுத்துவதாக அதிபர் எர்டோகன் (Erdogan) தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 50,000 க்கும் மேற்பட்டோரை அனுப்ப இருப்பதாகவும் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது துருக்கி மற்றும் சிரியா அரசு. ஆனால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து கிடப்பது, சாலைகள் பாதிக்கப்பட்டிருப்பதால் மக்களுக்கு நிவாரணத்தை விரைந்து வழங்கவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
10 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் மக்கள் சாலைகளில் மின்சாரம் கூட இல்லாமல் தங்க வேண்டிய சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் தென் கொரியா, ஈரான், கத்தார், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருத்துவ பொருட்கள், நிவாரண நிதி, அத்தியாவசிய பொருட்கள், மீட்புப் படையினரை அனுப்பி வைத்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றன.
இந்தியா நேற்று 100 பேர் கொண்ட பேரிடர் மீட்பு படையுடன் மருந்து பொருட்களை துருக்கிக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், 2வது நாளாக இன்று காலை இந்தியா மருந்து பொருட்களை துருக்கிக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் 2 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
மோனிஷா
கிச்சன் கீர்த்தனா :சோயா கோலா உருண்டை!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!