துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 50ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அதிகாலை துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலகையே உலுக்கியது. காரணம் 20நாட்களாகியும் முழுமையாக நிறைவடையாத மீட்புப் பணிகள் தான்.
தலை நிமிர்ந்து பார்க்கிற அளவிற்கு உயரம் கொண்ட ஏராளமான கட்டிடங்களும் தரைமட்டமாகின. நீண்ட நெடுஞ்சாலைகள் பிளந்து கொண்டது.
நிலநடுக்கத்தில் சிக்கித் தவித்த துருக்கி மற்றும் சிரியாவிற்கு உலக நாடுகள் அதன் மீட்புப் படை மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்தது. பிற நாடுகளின் மீட்புப் படை வீரர்களும் அந்நாட்டு வீரர்களுடன் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேட தொடங்கினர்.

மீட்புப் பணி தீவிரமடையத் தொடங்கியதும் பலி எண்ணிக்கையும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.
இடி பாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டவர்கள் சாலையில் தஞ்சமடைந்தும் தற்காலிக கூடாரங்களில் தங்கியும் வந்தனர். இதனால் அங்கு நிலவிய கடும் குளிரும் அவர்களை வாட்டியது.
இதனிடையே, நிலநடுக்கம் ஏற்பட்ட ஓரிரு நாட்களில் உலக சுகாதார அமைப்பு பலி எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்கும் என்று எச்சரித்திருந்தது அனைவரது மனதிலும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆனால், இன்று(பிப்ரவரி 25) காலை நிலவரப்படி துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதில் துருக்கியில் 44,218பேரும் சிரியாவில் 5,914பேரும் உயிரிழந்துள்ளனர்.
20நாட்களாகத் தொடர்ந்து வரும் மீட்புப் பணியும் அதிகரித்து வரும் பலி எண்ணிக்கையும் இரு நாட்டு மக்களிடமும் அச்சத்தை அதிகரித்து வருகிறது.
துருக்கியில் கடந்த 1999ஆம் ஆண்டு 17ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதற்கும் முன்னதாக 1939ஆம்ஆண்டு நிலநடுக்கத்தில் 33ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
துருக்கியில் இதுவரை இந்த இரண்டு நிலநடுக்கங்களே பெரிய பேரழிவாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு நிலநடுக்கங்களையும் பின்னுக்குத் தள்ளி 2023ஆம் ஆண்டு நிலநடுக்கம் பேரழிவின் உச்சத்தைத் தொட்டுள்ளது.
மோனிஷா