40 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை: மீண்டும் நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அதிகாலை துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் உலக நாடுகளையும் சோகத்தில் ஆழ்த்தியது. வேகமாக அதிகரித்து வந்த பலி எண்ணிக்கை வீடுகளை இழந்து சாலையில் தஞ்சமடைந்த அந்நாட்டு மக்களை மேலும் அச்சமடையச் செய்தது.
உணவு, தங்குமிடம் இன்றி தவித்து வந்த மக்களை கடும் குளிரும் வாட்டி வதைத்து வருகிறது. மக்கள் அனைவரும் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு இன்று (பிப்ரவரி 15) 10வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மீட்புப் பணியில் துருக்கியுடன் ஏராளமான நாடுகள் மீட்புப் படை, மருந்து பொருட்கள், பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றை வழங்கி உதவி புரிந்து வருகின்றன.
இதுவரை நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. துருக்கியில் 35,518 பேரும் சிரியாவில் 5,800 பேரும் பலியாகியுள்ளனர். இரு நாடுகளிலும் 94,770-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 6 ஆம் தேதி தொடங்கிய சோகம் இன்னும் முடிவடையாத நிலையில், துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி ஏற்கனவே உறவுகளையும் வீடுகளையும் இழந்து வாடும் அந்நாட்டு மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
‘காதல் என்பது பொதுவுடைமை’: ஜோதிகாவின் காதல் பதிவு!
13 நாட்களில் தயாரான ‘கொன்றால் பாவம்’!