ஓட்டு கேட்டு இங்கு வராதீர்கள் : துருக்கி அதிபரை எச்சரிக்கும் பொதுமக்கள்
துருக்கியில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், துருக்கி அதிபருக்கு எதிராக பொதுமக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி 7.8 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவிலான இரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இதுவரை 21,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் துருக்கியில் நிலநடுக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரைந்து முடிவு எடுக்காத அந்நாட்டு அதிபர் தாயூப் எர்டோகன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதனையடுத்து நிலநடுக்கத்தின் மையமாக இருந்த ஹரமனமராஸ் நகரில் அதிபர் எர்டோகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
எனினும் 20 வருடங்களாக துருக்கியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வரும் அதிபர் எர்டோகன் மீது நாடு முழுவதும் மக்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
வரும் மே 14ஆம் தேதி அதிபர் தேர்தல் துருக்கியில் நடத்தப்பட உள்ளது. ஏற்கெனவே அவர் மீது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு உதவுதல், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் நிலநடுக்கத்திற்கு முன்னர் ஏற்பட்ட காலரா நோய்க்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது என்று எர்டோகன் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதன்படி நிலநடுக்கத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பிலும் வரவிருக்கும் தேர்தல் எர்டோகனுக்கு சவாலாக இருக்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நிலநடுக்கமும், தொடர்ந்து உயர்ந்து வரும் பலி எண்ணிக்கையும் அவரது அரசை நடுங்க வைத்துள்ளன.
நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் தன்ரிவெரிடி மற்றும் அடியமானும் உள்ளது. இங்குள்ள மக்கள் எர்டோகன் அரசுக்கு எதிராக தொடர்ந்து குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தன்ரிவெரிடியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒருவர் பேசுகையில், “நிலநடுக்கம் ஏற்பட்ட முக்கியமான மணிநேரத்தில் உயிர் பிழைத்தவர்களை மீட்க மீட்புப் பணியாளர்கள் சரியான நேரத்தில் இங்கு வரவில்லை. யாரும் காப்பாற்ற வராததால் எங்களது சொந்தங்களை நாங்கள் இன்று இழந்து நிற்கிறோம். எனவே வாக்கு கேட்டு யாரும் இங்கு வர வேண்டாம்” என்றார்.
அதேபோல் அடியமானில் மிகப்பெரிய குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த ஒருவர் பேசுகையில், ”நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டாம் நாள் மதியம் 2 மணி வரை அரசோ, போலீஸோ, ராணுவ வீரர்களோ, அதிபரோ யாரும் இங்கு வரவில்லை. இது வெட்கக்கேடு! எங்களை விட்டு எங்கே சென்றீர்கள்?” என்று பேசியுள்ளார்.
ஏற்கெனவே துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
நீங்கள் விலைக்கு வாங்குவதையும் பேசியிருக்கலாமே? – மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி
லியோ படக்குழுவினரின் வைரல் புகைப்படம்!