துருக்கி நிலநடுக்கம் : அமெரிக்கா விடுத்த பயங்கர எச்சரிக்கை!
துருக்கி – சிரியா எல்லைப்பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
துருக்கி – சிரியா எல்லையில் இன்று அதிகாலை 04:17மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
20 லட்சத்திற்கு அதிகமான மக்கள் வசிக்கும் துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17.9கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், சைப்ரஸ் மற்றும் எகிப்து போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் கட்டிடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அகால மரணத்தை தழுவியுள்ளனர்.
நிலநடுக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியா நாட்டைச் சேர்ந்த 640க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை விரைவில் ஆயிரத்தை தாண்டும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் குளிர்கால கடும்பனி காரணமாக நிரம்பியுள்ளதால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன.
எனினும் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க துருக்கி – சிரியாவின் மீட்புக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
துருக்கியில் உறவினர்களையும், வீடுகளையும் இழந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொட்டும் பணியில் அதிர்ச்சியுடன் சாலைகளில் நிற்கும் காட்சிகள் பலரையும் கலங்கவைத்துள்ளது.
இதுகுறித்து துருக்கி துணை அதிபர் ஃபுவாட் ஒக்டே கூறுகையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10மாகாணங்களில் குறைந்தது 2,300பேர் காயமடைந்துள்ளதாகவும், 1,700கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறியுள்ளார்.
மேலும் தற்போது வரை துருக்கியில் 284பேர் இறந்துள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வார் ரூம் ரகசியங்கள்: அமர் பிரசாத்துக்கு எதிராக மாரிதாஸ்
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!