துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தும் அங்கு நிலவும் மோசமான வானிலை மக்களை அச்சுறுத்தி வருகிறது.
துருக்கியில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை நிம்மதியான தூக்கத்தில் இருந்த மக்களின் நிலையை மாற்றியது அன்று ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம். துருக்கியில் ஏற்பட்ட இந்த தாக்கம் அண்டை நாடான சிரியாவையும் பாதித்தது.
இந்த நிலநடுக்கத்தால், கண்டு வியக்கும் அளவிற்கு இருந்த உயரமான கட்டிடங்களும் கண் இமைக்கும் நொடியில் சரிந்து தரைமட்டமாகின. நீண்ட நெடுஞ்சாலைகள் கூட பூமி வெடிப்பால் பிளந்து கொண்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது வெறும் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நொடிக்கு நொடி பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் ஏற்பட்ட அச்சமும் சோகமும் அந்நாட்டு மக்களை மட்டுமல்லாது உலக நாடுகளையும் தாக்கியது.
துயரத்தில் தவிக்கும் துருக்கி மற்றும் சிரியாவிற்கு தென்கொரியா, அமெரிக்கா, இந்தியா, கத்தார் உள்ளிட்ட 65-க்கும் மேற்பட்ட நாடுகள் மீட்புப் பணி மற்றும் நிவாரண உதவிகளில் ஈடுபட்டுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு நாட்கள் நிறைவடைந்தும் இன்னும் தொடர்ந்து வரும் மீட்புப் பணிகள் இருநாட்டு மக்களிடத்தில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பிப்ரவரி 10 ஆம் தேதி காலை நிலவரப்படி பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆனால் இந்த பேரழிவின் அளவு இன்னும் சரியாகத் தெரியவில்லை என்று ஐ.நா எச்சரித்துள்ளது.
துருக்கியில் 17,134 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிரியாவில் குறைந்தது 3,162 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1999 ஆம் ஆண்டு இதேபோன்ற நிலநடுக்கம் வடமேற்கு துருக்கியில் ஏற்பட்டதில் 17,000க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இதற்கும் முன்னதாக 1939 ஆம் ஆண்டு துருக்கியின் எர்சின்கான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 33 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மிகப் பெரிய அழிவை ஏற்படுத்திய நிலநடுக்கமாக அமைந்திருக்கிறது 7.8 ரிக்டர் நிலநடுக்கம்.
நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 100 மணி நேரங்கள் கடந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் அந்நாட்டு மக்களின் நம்பிக்கை செயலிழந்து வருகிறது. அங்குக் கொட்டி தீர்க்கும் உறைபனி உயிர் பிழைத்தவர்களையும் நிம்மதியாக விடாமல் வாட்டி வதைத்து வருகிறது. தங்குமிடம், குடிக்கத் தண்ணீர், உண்ண உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தாலும், மோசமான வானிலை காரணமாகப் பலர் உயிரிழந்து வருகின்றனர் என்று அந்நாட்டு மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த மோசமான நிலை தொடர்ந்தால் உயிர் பிழைத்தவர்களின் நிலை, கடுமையான நோய் பாதிப்பால் இன்னும் மோசமடையும் என்றும் வருந்துகின்றனர்.
உலக சுகாதார மையம், உயிர் பிழைத்தவர்கள் தங்குமிடம், உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை மிக வேகமாகப் பெற முடியாவிட்டால், இரண்டாவது மனிதாபிமான பேரழிவு ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின், ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் க்ளூஜ், துருக்கியின் காஜியான்டெப்பில் உள்ள அமைப்பின் ஊழியர்கள் வாகனங்களில் தூங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில் “இன்னும் நூற்றுக்கணக்கான அதிர்வுகள் ஏற்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீட்புப் படையினரின் முயற்சிகள், வாகனப் பற்றாக்குறை மற்றும் பாழடைந்த சாலைகள் உள்ளிட்ட பல தளவாடத் தடைகளால் தடைப்பட்டு வருகின்றன.
மோனிஷா
65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகள்: போக்குவரத்துக் கழகம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சோயா புலாவ்!