துனிஷா தற்கொலை: சிக்கிய காதல் கடிதம்!

Published On:

| By Monisha

தொலைக்காட்சி நடிகை துனிஷா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஒரு கடிதம் சிக்கியுள்ளது.

தொலைக்காட்சி நடிகையான துனிஷா ஷர்மா, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஜேஜே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, துனிஷாவின் தாய் வனிதா, தன் மகளின் மரணத்திற்கு அவருடன் அலி பாபா தஸ்தான் இ காபூல் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த சகநடிகரும் அவரது முன்னாள் காதலருமான ஷீசன் முகமது கான் தான் காரணம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

துனிஷாவின் தாயார், இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் தங்களது உறவை முறித்துக் கொண்டனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஷீசன் கானை மும்பை போலீஸ் டிசம்பர் 25 அன்று கைது செய்து தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஷீசன் கானை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏ ராம் கதாம், துனிஷா மரணத்திற்குப் பின்னால் லவ் ஜிகாத் இருக்கிறது. அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும், மகாராஷ்டிரா அமைச்சரும் பாஜக தலைவருமான கிரிஷ் மகாஜன், “நடிகை தற்கொலைக்கு லவ் ஜிகாத் தான் காரணம். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு லவ் ஜிகாத்திற்கு எதிராகக் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஆனால் துணை ஆணையர் சந்திரகாண்ட் ஜாவத் கூறுகையில், “விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஷீசனின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கொலை மிரட்டல், லவ் ஜிகாத் போன்ற காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை” என்றார்.

தொடர்ந்து துனிஷாவின் தாய், வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “ஷீசன் கான் என் மகளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்திருந்தார். ஆனால் அவள் உடனான உறவை முறித்துக் கொண்டார்.

ஷீசனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தபோதும் துனிஷாவுடன் உறவைத் தொடர்ந்தார். அவளை மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் பயன்படுத்திக் கொண்டான். ஷீசன் தப்பிவிடக்கூடாது. நான் என் குழந்தையை இழந்து விட்டேன். எனக்குத் துணையாக இருக்கும் ஊடகத்திற்கு நன்றி” என்று கண்கலங்கிப் பேசியிருந்தார்.

முதல் நாள் போலீஸ் விசாரணையில் ஷீசன் சில வாக்குமூலங்களை அளித்திருந்தார். அதில் ஷ்ரத்தா வால்கர் கொலை சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் தான் துனிஷாவுடன் இருந்த உறவை முறித்துக் கொள்வதற்குக் காரணம்.

இருவரும் வெவ்வேறு சமூகம் மற்றும் இருவருக்கும் இருந்த வயது வித்தியாசமும் இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார். (துனிஷாவிற்கு 20 வயது, ஷீசனுக்கு 28 வயது).
மேலும் ஷீசன், “இதற்கு முன்பாக துனிஷா ஒரு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது நான் தான் காப்பாற்றி அவரது தாயாரிடம் அவரை கவனமாகவும் அதிக அக்கறையுடனும் பார்த்துக் கொள்ளுமாறு கூறினேன்” என்றும் கூறியுள்ளார்.

போலீசார் துனிஷா மற்றும் ஷீசன் கான் இருவருக்கும் இடையேயான உரையாடல்களை அறிந்து கொள்வதற்காக, இருவரது செல்போன்களைகளையும் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். தொடர்ந்து துனிஷாவின் தாயார் செல்போனையும் போலீசார் விசாரணைக்காகக் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து துனிஷா தற்கொலை செய்து கொண்ட அன்று ஷீசன் மற்றும் உடன் இருந்த ஒருவர் துனிஷாவை தூக்கிக் கொண்டு செல்லும் வீடியோவும் வெளியாகியிருந்தது. இது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்றைய தினம் ஷீசன் கான் துனிஷாவுடன் மேக் அப் அறையில் 15 நிமிடங்கள் பேசியுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டபோது, அவர் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். என்னை இணை நடிகராகப் பெற்றது அவர் பாக்கியம் என சகநடிகரும், முன்னாள் காதலருமான ஷீசன் முகமது கான் பற்றி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி துனிஷா தற்கொலை செய்து கொண்ட அன்று ஷீசன் கான் தனது ரகசிய காதலியுடன் 2 மணி நேரம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் ஷீசன் கான் போலீஸ் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை.

ஷீசன் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் வாக்குமூலத்தை மாற்றி வருகிறார் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோனிஷா

வீடுகளைக் காலி செய்யும் வழக்கு: வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீனமாகும் வனப்படை: தமிழக அரசு அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share