திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில், நாளை (ஜனவரி 11) முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 2ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல் வழியாக தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்காக, 300 ரூபாய் நுழைவு சிறப்பு தரிசனத்துக்கான 2 லட்சம் டிக்கெட்டுகளை ஆன்லைனில் தேவஸ்தானம் ஏற்கனவே விநியோகித்தது. அனைத்து டிக்கெட்களும் வெளியிடப்பட்ட வெறும் 32 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.
இன்று நள்ளிரவு 12 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். அதுவரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
அதன் பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் கதவு அடைக்கப்படும்.
இதையடுத்து கடந்த 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-ராஜ்
2 மணி நேரம் ஈபிஎஸ் வாதம் நிறைவு: அதிமுக வழக்கு ஒத்திவைப்பு!