பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டே, இந்தியப் பொருட்களுக்கு அதிக வரிகள் விதிப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். trump warned modi on high tariff
பிரான்ஸ் நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, கடந்த 12ஆம் தேதி இரவு அங்கிருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்றடைந்தார்.

அவருக்கு தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்டையும், தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.

அதனையடுத்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கட்டிப்பிடித்து வரவேற்றார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி சந்திக்கும் முதல் சந்திப்பு இது.
மேலும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பானின் இஷிபா மற்றும் ஜோர்டானின் மன்னர் அப்துல்லா II ஆகியோரைத் தொடர்ந்து, கடந்த மாதம் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து வருகை தரும் நான்காவது வெளிநாட்டுத் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்களும் அதிக வரி வசூலிப்போம்!
தொடர்ந்து இருவரும் ஒரே மேடையில் கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது மோடியை தனது சிறந்த நண்பர் என்று கூறிய டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதையும், மோடியை வசூல் ராஜா என்று கேலியாக சுட்டிக்காட்டினார்.
டிரம்ப் பேசுகையில், “உலகிலேயே அதிக வரி வசூலிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதன் காரணமாக இந்தியா வணிகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடாக உள்ளது. மிக அதிக வரி கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் காரணமாக ஹார்லி டேவிட்சன் தங்கள் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் விற்க முடியாமல் போனதை நான் நினைவில் கொள்கிறேன்.
இந்த நிலையில் நாங்களும் இனி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கிறோம். வெளிப்படையாகச் சொன்னால், இனி இந்தியா என்ன வசூலிக்கிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியமில்லை“ என்று டிரம்ப் பேசினர்.
தொடர்ந்து மோடி பேசுகையில், ”MAGA (Make America Great Again) மீது டிரம்ப் உறுதியாக உள்ளார். அதே போன்று வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அமெரிக்க பாணியில் சொல்வதானால், MIGA (Make India Great Again) என குறிப்பிடலாம். தற்போது.இந்தியா-அமெரிக்கா இணைந்து, அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக ஒரு MEGA கூட்டாண்மையைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற 4 மணி நேர இருதரப்பு பேச்சுவார்த்தை பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி 2008 மும்பை தாக்குதல்களில் சதித்திட்டம் தீட்டியவர்களில் ஒருவரான தஹாவ்வூர் ஹுசைன் ராணாவை நாடு கடத்த டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான இராணுவ விற்பனை அமெரிக்க பல பில்லியன் டாலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
F-35 ஸ்டெல்த் போர் விமானங்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், இறக்குமதிகள் மீது மற்ற நாடுகள் வசூலிக்கும் வரி விகிதங்களுடன் பொருந்தக்கூடிய வகையில் வரிகளை அதிகரிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
அப்போது இந்தியா அதிக இறக்குமதி வரிகளை விதிப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அமெரிக்க பயணத்திற்கு முன்பாக உயர் ரக மோட்டார் சைக்கிள்களுக்கான வரிகளை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.