அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவருக்காக தேர்தல் பணியாற்றிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு கேபினட்டில் அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை (நவம்பர் 6) தொடங்கியது. ஆரம்பம் முதல் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை பின்னுக்கு தள்ளி குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்தார். தற்போதைய நிலவரப்படி 267 எலக்டோரல் வாக்குகள் பெற்று வெற்றியின் எல்லைக்கோட்டை டிரம்ப் நெருங்கியுள்ளார்.
டிரம்ப்பின் வெற்றி உறுதியான நிலையில், புளோரிடாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய டிரம்ப், “என்னை மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுத்ததற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது ஒவ்வொரு மூச்சிலும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் போராடுவேன். அமெரிக்காவின் பொற்காலம் இங்கே தொடங்குகிறது. வலுவான, பாதுகாப்பான மற்றும் வளமான அமெரிக்காவை வழங்கும் வரை நான் ஓயமாட்டேன்” என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து டிரம்பின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த எலான் மஸ்க்கை பாராட்டினார்.
எலான் மஸ்க் குறித்து டிரம்ப், “இப்போது ஒரு ஸ்டார் பிறந்திருக்கிறார். அது வேறு யாரும் இல்லை எலான் தான். அவர் ஒரு அற்புதமான நபர். நேற்று இரவு அவருடன் நான் சிறிது நேரம் உரையாடினேன். அவர் எனக்காக பிலடெல்பியா, பென்சில்வேனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு வாரங்களாக பிரச்சாரம் செய்தார்” என்று பாராட்டியிருந்தார்.
அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு எலான் மஸ்க் வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்திருந்தார். டிரம்ப்பின் அரசின் செயல் குழுவிற்கு எலான் மஸ்க் தேர்தல் செலவுக்காக 75 மில்லியன் டாலர் வழங்கினார்.
மேலும், எக்ஸ் தளத்தில் டிரம்ப்புக்கு ஆதரவாக போஸ்ட்களை பதிவிட்டு வந்தார். எக்ஸ் வலைதளத்தில் எலான் ஒருங்கிணைப்பில் எக்ஸ் ஸ்பேஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிரம்ப் உரையாற்றினார். தொடர்ந்து அமெரிக்காவின் பல பகுதிகளிலும் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தேர்தல் பிரச்சார களத்தின்போது ராய்ட்டர்ஸ் ஊடகத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில், “எலான் மஸ்க் விரும்பினால் குடியரசு கட்சி ஆட்சி அமைக்கும் போது அவருக்கு கேபினட்டில் முக்கிய பதவி அல்லது அரசு நிர்வாகத்தில் ஆலோசகர் பதவி வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட எலான் மஸ்க், நான் மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருப்பதாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில், டிரம்ப் வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவருக்காக தொடர்ந்து பிரச்சார களத்தில் ஈடுபட்டு வந்த எலான் மஸ்க்கிற்கு கேபினட்டில் முக்கிய பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிரம்ப் வெற்றி… உச்சத்தை தொட்ட பிட்காயின்
ட்ரம்ப் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்த இந்திய வம்சாவளியினர்!