கடந்த 7 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தவித்து கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸை மீட்கும் பணியை எலான் மஸ்க் வசம் ஒப்படைத்துள்ளார் டிரம்ப்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள டிரம்ப், ‘கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 59 வயது சுனிதா வில்லியம்சும் 62 வயதான வில்மோரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்ப முடியாமல் இருக்கின்றனர். பைடன் அரசு இந்த மிகச்சிறந்த விண்வெளி வீரர்களை கைவிட்டு விட்டது.
துணிச்சல் மிக்க இரு விண்வெளி வீரர்களையும் மீட்கும் பணியை எலான் மஸ்க் வசம் ஒப்படைக்கிறேன். விண்வெளியில் 7 மாதங்களாக காத்திருக்கும் அவர்களை மீட்கும் பணியை மஸ்க் சிறப்பாக செய்து முடிப்பார். அனைவரும் பாதுகாப்பாக பூமி திரும்புவார்கள் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
டிரம்பின் பதிவுக்கு பதிலளித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், ‘ஜோ பைடன் நிர்வாகம் இத்தனை காலம் அவர்களை விண்வெளியில் தவிக்க வைத்தது நினைத்தே பார்க்க முடியாதது. நாங்கள் அவர்களை மீட்போம்’ என்று கூறியுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி போயிங்ஸ்டார்லைனர் கேப்ஸ்யூல் மூலம் சுனிதாவும் வில்மோரும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். 8 முதல் 10 நாட்கள் வரை அவர்கள் இருவரும் அங்கு தங்கியிருப்பார்கள் என்றுதான் சொல்லப்பட்டது.

ஆனால், தொழில்நுட்ப கோளாறு மற்றும் ஸ்டார்லைனரில் ஹீலியம் கசிவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அந்த கேப்ஸ்யூல் வீரர்கள் இல்லாமல் தனியாக பூமி வந்தது. ஏனென்றால், இந்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்புவது பாதுகாப்பானது இல்லை என்பதை நாசா உணர்ந்திருந்தது. இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்தனர். இந்த நிலையில்தான், இருவரையும் மீட்க ஸ்பேஸ் எக்ஸ் களம் இறங்கவுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ 10 என்ற தனி விண்கலத்தை ஏவி இருவரையும் மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வருகிற மார்ச் மாதத்தில் சுனிதாவுடன் வில்மோர் பூமி திரும்பலாம். அப்படி திரும்பும் பட்சத்தில் இருவரும் கிட்டத்தட்ட 300 நாட்கள் விண்வெளியில் இருந்திருப்பார்கள்.
போயிங் ஸ்டார்லைனரின் போட்டியாளரான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சுனிதாவை மீட்கும் பணி வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது. சுனிதாவை பத்திரமாக மீட்கும்பட்சத்தில் எலான் மஸ்க் மீதான அமெரிக்க அதிபரின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தாராளமாக நம்பலாம்.