அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்ற அந்த நொடியில் இருந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் டிரம்ப். அதில் ஒன்று இப்போது, அமெரிக்க அரசு ஊழியர்களை பணியில் இருந்து விலகச் சொல்கிற அறிவிப்பு.
இதுதொடர்பாக அமெரிக்க அரசு மனித மேம்பாட்டு துறையான ஆபீஸ் ஆஃப் பெர்சோனல் மேனேஜ்மெண்ட் சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “அரசு ஊழியர்கள் விருப்பப்பட்டால் தற்போது தங்களது வேலைகளை ராஜினாமா செய்யலாம். அப்படி செய்தால் அவர்களுக்கு 8 மாத சம்பளம் கொடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சலுகை வரும் பிப்ரவரி 6-ம் தேதி வரை மட்டுமே என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மெயிலின்படி, அரசு ஊழியர்கள் உடனே ராஜினாமா செய்தாலும், பணியில் இருந்தால் என்னென்ன சலுகைகள் கிடைக்குமோ, அந்த அத்தனை சலுகைகளும் வரும் செப்டம்பர் மாதம் வரை அவர்களுக்கு அப்படியே கிடைக்கும். டிரம்ப் அரசின் இந்த அதிரடி முடிவுக்கு, ‘அரசு செலவினங்களை குறைப்பது’ முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையில் விண்ணப்பிக்க துறையின் எக்ஸ்பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கும் முன்னரே, புதிதாக அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (DOGE) உருவாக்கப்படவுள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்தவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை உருவாக்கப்பட்டது. இந்தத் துறையை நிர்வகிப்பதற்காக தலைவர்களாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும், இந்திய – அமெரிக்கத் தொழிலதிபரும் குடியரசுக் கட்சியின் முக்கியத் தலைவருமான விவேக் ராமசாமியும் நியமிக்கப்பட்டனர்.
இருந்தபோதிலும், 2026-ம் ஆண்டு ஓஹியோ மாகாணத்தின் ஆளுநர் தேர்தலில் போட்டியிடவிருப்பதால்தான், தற்போது பதவி விலகுவதாக விவேக் ராமசாமி கூறி விலகி விட்டார். தற்போது, இந்தத் துறையின் தலைவராக எலான் மஸ்க் மட்டுமே உள்ளார். இந்த நிலையில், இந்தத் துறையின் ஆட்சேர்ப்பு பணியும் நடைபெற்று வருகிறது.
மென்பொருள் பொறியாளர்கள், தகவல் பாதுகாப்பு வல்லுநர்கள், நிதி ஆய்வாளர்கள், மனித வள வல்லுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு முழுநேரம் பணியாற்ற உலகத்தரம் வாய்ந்த பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று துறையின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பின் தகுதிகள், எலான் மஸ்க்கின் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், தி போரிக் கம்பெனி முதலான தனியார் நிறுவனங்களில் நடத்தப்படும் ஆட்சேர்ப்பு அறிவிப்பைப்போல் உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். Trump offers incentives to federal workers to quit jobs
மேலும், இப்போதிருக்கும் அனுபவமிக்க அரசு ஊழியர்கள் பணியில் இருந்து விலகினால், அரசு இயந்திரம் நிச்சயம் பாதிக்கும். மேலும், வெளிப்படத்தன்மை மற்றும் பொறுப்புணர்ச்சி இல்லாமல் போக அதிக வாய்ப்புள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதார மந்தநிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது அமெரிக்கா. இந்த சமயத்தில் ஊழியர்கள் பெரிய அளவில் வேலையை இழந்தால், இது நிச்சயம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். இதனால், மீண்டும் பொருளாதாரம் ஆட்டம் காணலாம் என்கிறார்கள்.