புதுச்சேரியில் இன்று (நவம்பர் 9) அதிகாலையில் மூன்றரை மணி நேரத்திற்குள் 61 ரெளடிகளை புதிய எஸ்எஸ்பி கலைவாணன் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளராக (எஸ்எஸ்பி) கடந்த நவம்பர் 1ஆம் தேதி பொறுப்பேற்றார் கலைவாணன் ஐபிஎஸ். அதனையடுத்து உடனடியாக ஏனாம் எஸ்பி, புதுச்சேரி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு எஸ்பி.க்கள், போதைத் தடுப்பு பிரிவு எஸ்பி, எஸ்டிஎஃப் எஸ்பி ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.
அப்போது, “உங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ரவுடிகள் விவரங்கள், சிறையில் இருப்பவர்கள், வெளியில் இருப்பவர்கள், பின்னணியில் இருப்பவர்கள், பொருளாதார உதவிகள் செய்பவர்கள் ஆகியோரின் விவரங்கள் முழுமையாக வேண்டும்” என்று கேட்டார் கலைவணான்.
குறிப்பாக லாட்டரி விற்பனையாளர்களையும், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளையும் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி லாட்டரி சீட்டுகள் விற்ற வில்லியனுார் வேல்முருகன், வாணரபேட்டை விஜயன், பிள்ளைத்தோட்டம் பழனிகுமார், சாரம் ஸ்டீபன் ராஜ், கவுண்டம்பாளையம் குமரன், வேல்ராம்பட்டு கதிர்வேல், முதலியார்பேட்டை குமார், தயாளன், டோனி உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக நமது மின்னம்பலம் தளத்தில் கடந்த 6ஆம் தேதி ‘ஒரே நாளில் 9 லாட்டரி விற்பனையாளர்கள் கைது… அதிரடியாக களமிறங்கிய கலைவாணன் ஐபிஎஸ் : யார் இவர்?‘ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில் தான் அவர் ஏற்கெனவே கேட்டுக்கொண்டபடி எஸ்எஸ்பி கலைவாணனிடம் ரெளடிகளின் முகவரியுடன் அடங்கிய முழுமையான பட்டியல் அளிக்கப்பட்டது.
அதனை பெற்றுக்கொண்ட அவர், நேற்று விவரம் எதுவும் தெரிவிக்காமல் புதுச்சேரியில் உள்ள அனைத்து எஸ்பிக்களையும் தங்களது டீமுடன் தயாராக இருக்கும்படி உத்தரவிட்டார்.
அதன்படி, மொத்தம் 6 எஸ்.பி, இன்ஸ்பெக்டர், எஸ் ஐ, போலீஸ் என 250 பேர் கொண்ட 12 டீம் இரவோடு இரவாக அமைக்கப்பட்டது.
அவர்கள் மூலம் ‘ஆபரேஷன் திரிசூல்’ என்ற பெயரில் இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை சுமார் 3.30 மணி நேரம் இதுவரை புதுச்சேரியில் வரலாறு காணாத ஒரு அதிரடி ரெய்டு நடைபெற்றது.
அப்போது கஞ்சா வியாபாரிகள், கொலை குற்றவழக்கில் உள்ள மொத்தம் 61 ரெளடிகளை அவர்களது வீட்டில் உறங்கி கொண்டிருக்கும் போதே தட்டி தூக்கிய போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கைதான ஒவ்வொருவர் மீதும் கொலை, கொலை முயற்சி, கஞ்சா, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என குறைந்தது 3 முதல் அதிகபட்சம் 15 வழக்குகள் உள்ளன.
இதில் ஒரு ரெளடி வீட்டில் கஞ்சா எடுக்கப்பட்டுள்ளது. 7 ரெளடிகள் வீட்டில் கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். 44 ரெளடிகளை குற்றங்களை தடுக்கும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.
மேலும் சில ரெளடிகளை தேடி வரும் நிலையில், வெளியே உள்ள ரெளடிகளுக்கு சிறையில் உள்ள ரெளடிகள் உதவி வருகிறார்கள் என்பதை கண்டறிந்த எஸ்.எஸ்.பி கலைவாணன் கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.
புதுச்சேரியில் பொறுப்பேற்ற 10 நாட்களுக்குள், லாட்டரி விற்பனையாளர்கள், குற்றவழக்கில் உள்ள ரெளடிகளை எஸ்.எஸ்.பி கலைவாணன் தலைமையிலான டீம் அதிரடியாக கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
விறுவிறுக்கும் கட்சிப் பணிகள்… கள ஆய்வு குழுவை நியமித்த எடப்பாடி
நேருவுடன் நயினார் சந்திப்பு? நெல்லையில் கிளம்பும் புயல்!