திரிணமுல் காங்கிரஸ் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே, குஜராத் போலீசாரால் நேற்று (டிசம்பர் 5) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சாகேத் கோகலே, குஜராத் மோர்பி பால விபத்து குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டதற்கு அவரை குஜராத் காவல்துறையினர் கைது செய்ததாக திரிணமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரக் ஓ பிரைன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாகேத் நேற்று இரவு 9 மணிக்கு டெல்லியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டார். அவர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இறங்கியதும், குஜராத் போலீசார் விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் சாகேத் அவரது தாயாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, குஜராத் காவல்துறை அவரை கைது செய்து அகமதாபாத் அழைத்து செல்வதாக கூறியிருக்கிறார்.
அந்த இரண்டு நிமிட தொலைபேசி அழைப்பை செய்ய மட்டுமே காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
பின்னர் அவரது தொலைபேசி மற்றும் பொருட்கள் அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
குஜராத் மோர்பி பால விபத்து குறித்து சாகேத் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதால் அவர் மீது அகமதாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
பாஜக அரசியல் பழிவாங்கல் செய்து, திரிணமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை கைது செய்வதன் மூலம் அமைதிப்படுத்திவிட முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி சாகேத் கோகேலே வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மோடியின் மோர்பி பயணத்திற்கு ரூ.30 கோடி செலவானது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதில் ரூ.5.5 கோடி மட்டும் வரவேற்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மோர்பி பால விபத்தில் உயிரிழந்த 135 பேருக்கு நிவாரணத்தொகையாக ரூ.5 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மோடியின் நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை என்பது 135 பேரின் வாழ்க்கையை விட அதிகம்.” என்று தெரிவித்தார்.
இதனால் அவரை பாஜக நிர்வாகிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தநிலையில், நேற்று குஜராத் காவல்துறையினரால் சாகேத் கோகேலே கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்வம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு: தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
ஆன்லைனில் பாலியல் தொழில்: வைரலில் பகாசூரன் டிரைலர்!