சட்டப்பேரவையில் இட ஒதுக்கீடு கேட்கும் ஜம்மு – காஷ்மீர் மூன்றாம் பாலினத்தவர்கள்!

Published On:

| By Kavi

Transgender hold rally in Jammu

ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கென இட ஒதுக்கீடு கேட்டு மூன்றாம் பாலினத்தவர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 வரை மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொ டர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் உள்ள மூன்றாம் பாலின சமூகத்தினர் சட்டப்பேரவையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நேற்று (ஆகஸ்ட் 31) பேரணி நடத்தியுள்ளனர்.

ஜம்முவில் உள்ள விக்ரம் கவுக் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணி ஹரி சிங் பார்க் வரை நடத்தப்பட்டுள்ளது.

”ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 90 இடங்களில் ஒன்றுகூட எங்கள் சமூகத்தினருக்கு ஒதுக்கப்படவில்லை. ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட இரு பகுதிகளில் குறைந்தது ஒரு தொகுதி மட்டுமாவது எங்கள் சமூகத்தினருக்கென வழங்கப்பட வேண்டும். அப்போது தான் எங்களுக்கானப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்” என பேரணியைத் தலைமையேற்று நடத்திய ரவீனா வீ மஹந்த் கூறியுள்ளார்.

மேலும், ”இங்குள்ள தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளால் நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வரும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றிற்கானக் கோரிக்கையாக இந்தப் பேரணி நடத்தப்படுகிறது.

இத்தகைய இடஒதுக்கீடு இல்லாமல் எங்கள் சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதுடன், எங்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்பட முடியாத நிலையில் இருக்கின்றோம்.

இந்த முக்கிய மாற்றங்களுக்காக எங்கள் சமூகம் தொடர்ந்து குரல் எழுப்பும். மேலும், பிரச்சினைகளை விரைவில் தீர்க்க அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்” என்றும் மஹந்த் கூறியுள்ளார்

பேரணியில் பங்கேற்றவர் பேசுகையில், ”அரசியல் கட்சிகளும் அரசுகளும் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகின்றன. ஆனால் எங்களுக்கு வேலைகளில் இட ஒதுக்கீடு அல்லது கல்வி நிறுவனங்களில் தனி கழிப்பறைகள் இல்லாதது குறித்து வெறும் உதட்டளவில் பேசுவதோடு நின்று விடுகின்றனர்.

எல்ஜிபிடிக்யூ மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் குரல் எழுப்புவோம். அரசாங்கம் எங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மீண்டும் பயங்கரம்: மாட்டிறைச்சி சாப்பிட்டதாக தொழிலாளி அடித்துக்கொலை!

சக்சஸ் டிப்ஸ்: தள்ளிப்போடுவதை தவிருங்கள்… வாழ்க்கை வசமாகும்!

பியூட்டி டிப்ஸ்: குழந்தைகளுக்கான சோப், ஷாம்பூவை பெரியவர்களும் உபயோகிப்பது சரியா?

டாப் 10 செய்திகள் : சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு முதல் மழை அப்டேட் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel