தெலங்கானா மற்றும் ஆந்திராவில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 18) நடத்திய சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலங்கானாவில் உள்ள நிசாமாபாத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபடுவதற்கு பயிற்சி முகாம் நடத்துவதாகவும், மத ரீதியில் பகைமையை உருவாக்க முயற்சிப்பதாகவும் கடந்த ஜூலை 4 ஆம் தேதி முகமது இம்ரான், அப்துல் காதர், ஷேக் ஷகதுல்லா, முகமது அப்துல் முபின் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்பு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை மறுபதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கியது.
இந்த வழக்கு தொடர்பாக தெலங்கானா மற்றும் ஆந்திராவில் மொத்தம் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை இன்று (செப்டம்பர் 18 )சோதனை நடத்தியது.
இஸ்லாமிய மத அமைப்புகள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், இரண்டு கத்திகள் மற்றும் 8 லட்சத்திற்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
Comments are closed.