ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணம் செய்தால் அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
குறிப்பாக, ஜூன் 11ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு வங்கம் செல்லும் ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாத நபர்கள் பலர் ஏறியதால், முன்பதிவு செய்த பயணிகளால் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து, சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்டது.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டுமல்லாது, வந்தே பாரத் ரயில்களிலும் பலர் விதிமுறைகளை மீறி பயணம் செய்வது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இதுகுறித்து நேற்று (ஜூன் 13) மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அனைத்து மண்டல பொது மேலாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த சில நாட்களாக “Rail MADAD” இணையதளத்தில் முன்பதிவு பெட்டிகளில், முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது குறித்த புகார்கள் அதிகரித்து வருவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அந்த ஆலோசனையின்போது, ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்வது தொடர்பாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், முன்பதிவு பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டும் அந்தந்த பெட்டிகளில் பயணம் செய்வதை உறுதிப்படுத்துவதற்காக ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் அரசு ரயில்வே காவல்துறையினர் உள்ளடக்கிய சிறப்புக் குழுவை அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தினார்.
இதன்படி, முன்பதிவு பயணச்சீட்டு இல்லாத பயணிகளை கண்டறியும் பணியை ரயில்வே நிர்வாகிகள் தொடங்கி உள்ளனர். மேலும், முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்வதாக தெரிவிக்கப்பட்ட 10 சிறப்பு ரயில்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொலைதூர ரயில்களில் மட்டுமல்லாமல் பிற ரயில்களிலும் பயணச்சீட்டை சரிபார்க்கும் அதிகாரி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி இடம்பெறும் வகையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் நேற்று (ஜூன் 14) வெளியிட்ட அறிவிப்பில், “ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணிகள் அல்லது உரிய பயணச்சீட்டு இல்லாத நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதித்து, பாதுகாப்பு படை வீரர்களின் உதவியுடன், அவர்கள் அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடப்படுவர்.
சீசன் டிக்கெட், பொது அல்லது காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணச்சீட்டுகளை வைத்துள்ளவர்கள் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய வேண்டாம் என ரயில் நிலையங்களில் அறிவிப்பு வெளியிடப்படும்.
சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மே மாதத்தில் மட்டும் முன்பதிவு பெட்டியில் அனுமதியில்லாத பயணிகள் பயணம் செய்ததாக 68 புகார்கள் பதிவாகி உள்ளன.
அதேபோல், தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை எழும்பூர் – மதுரை வைகை விரைவு ரயில்களில் முறையே 35 மற்றும் 27 புகார்கள் பதிவாகி உள்ளன.
ரயில்களில் அங்கீகரிக்கப்படாத பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் நாள்தோறும் மண்டல ரயில்வே அதிகாரிக்கு, மண்டலம் முழுவதும் உள்ள ரயில் நிலைய அதிகாரிகள் கருத்து தெரிவிக்க வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சார்பில் நேற்று (ஜூன் 13) வெளியிடப்பட்ட அறிவிப்பில், பயணிகளின் நெரிசலை குறைக்க, 19 பொது இரண்டாம் வகுப்பு, ஒரு இரண்டாம் வகுப்பு மற்றும் லக்கேஜ் பேக் வேன் கொண்ட சென்னை – சந்திரகாசி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மேலும், 15 ஸ்லீப்பர் கிளாஸ் வகுப்பு மற்றும் 2 இரண்டாம் வகுப்பு கொண்ட சென்னை சென்ட்ரல்-சந்திரகாசி-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மூடப்படும் திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல்… போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுலாத் துறை நடவடிக்கை!
”நீட் மோசடிக்கு முடிவு கட்டுவது எங்கள் பொறுப்பு” – முதல்வர் ஸ்டாலின்