சுற்றுலாவில் நேர்ந்த துயரம்… பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு!

Published On:

| By christopher

துருக்கி ஸ்கை ரிசார்ட்டில் இன்று (ஜனவரி 21) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ள போலு மாகாணத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக கொரோக்லு மலைப்பகுதி உள்ளது. தற்போது சீசன் என்பதால் அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள 12 மாடிகள் கொண்ட ஸ்கை ரிசார்ட் உணவகத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 30 தீயணைப்பு வண்டிகளில் வந்து வேகமாக பரவிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஹோட்டலில் 234 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். அவர்களில் 10 வயது சிறுவன் உட்பட 66 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். காயமடைந்த 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக துருக்கிய உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.

இதற்கிடையே ரிசார்ட்டின் உரிமையாளர் உட்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் இல்மாஸ் துன்க் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share