டர்பனை கிழித்து குப்பையில் போட்டனர்’- அமெரிக்க வதை முகாம் கொடூரங்கள்

Published On:

| By Kumaresan M

சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வருகிறது.

நேற்று அமிர்தசரஸ் நகருக்கு 111 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்தவர்களில் ஒருவர்தான் ஜதிந்தர் சிங்.

23 வயதான இவர், இங்கே வேலை கிடைக்காத நிலையில் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு, அமெரிக்க அதிகாரிகளிடம் சிக்கி வதைமுகாமில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்க வதைமுகாமில் தனக்கு நடந்த கொடுமைகளை ஜதிந்தர் சிங் செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது, ‘ கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி வீட்டைவிட்டு வேளியேறினேன். செப்டம்பர் 27 ஆம் தேதி அமெரிக்கா சென்று விட்டேன். ஆனால், எல்லையிலேயே என்னை அமெரிக்க அதிகாரிகள் பிடித்து விட்டனர். தொடர்ந்து, வதைமுகாமில் அடைத்து கொடுமைப்படுத்தினர்.

எனது டர்பனை கழற்றி அங்கிருந்த குப்பை தொட்டியில் போட்டனர். நான் எதிர்ப்பு தெரிவித்தால், இது எங்கள் சட்டம் என்று சொன்னார்கள். உணவு கூட தரவில்லை. நாள் ஒன்றுக்கு இரு வேளை லேஸ் பாக்கெட்டும் இரண்டு ஃபூருட்டி மட்டுமே குடிக்க கொடுத்தனர்.

1.3 ஏக்கர் நிலத்தை விற்று எனது சகோதரிகளின் நகைகளை அடமானம் வைத்து 50 லட்சம் திரட்டி ஏஜண்டுகளிடம் கொடுத்தேன். இப்போது, எல்லாமே போச்சு. பனமா காடுகள் வழியாக போகும் போது, ஆங்காங்கே சடலங்களை பார்த்தேன். இவர்கள் அமெரிக்காவுக்குள் விதிகளை மீறி நுழைய முயன்று இறந்தவர்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியைடைந்தேன்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் திரும்பிய போதும் மனிதாபிமானத்துடன் நடத்தவில்லை. கை, கால்களில் விலங்கு போட்டிருந்தார்கள். கழிவறை கூட போக முடியவில்லை. விமானம் அமிர்தசரசில் தரையிறங்க 10 நிமிடங்கள் இருந்த போதுதான், விலங்குகளை அவிழ்த்து விட்டார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share