நாடு முழுவதும் தக்காளி விலை கடும் உச்சத்தில் உள்ள நிலையில் கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து டெல்லிக்கு தக்காளி லோடு ஏற்றிச்சென்ற லாரி தெலங்கானா அருகே கவிழ்ந்தது.
விவரம் அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தக்காளிகளை பைகள், பாத்திரங்களில் அள்ளிச் சென்றனர். போலீஸார் அவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டியடித்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து டெல்லிக்கு 18 டன் தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவலா பைபாஸ் சாலையில் நேற்று (ஜூலை 16) இரவு சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் தப்பினர். இதற்கிடையில் லாரியில் இருந்த தக்காளி சாலை முழுவதும் சிதறியது.
தற்போது கடும் விலை உயர்வால் தவித்த அந்தப் பகுதி மக்கள், அங்கு விரைந்து சென்று தக்காளிகளை பைகள், பாத்திரங்களில் போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர், கிளீனர் ஆகியோர் உடனடியாக போலீஸாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் விரைந்து வந்தனர்.
போலீஸாரை வந்தபோதும் பொதுமக்கள் அவர்களை கண்டுகொள்ளாமல் தக்காளிகளை அள்ளிச்செல்வதில் குறியாக இருந்தனர். இதனால் போலீஸார் அவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இதனிடையே மாற்று லாரி வரும்வரை தக்காளிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என லாரி டிரைவர் மற்றும் கிளீனர் கேட்டுக்கொண்டனர். அதற்கேற்ப சுமார் ஆறு மணி நேரம் வரை போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாற்று லாரி வந்தவுடன் அவற்றில் ஏற்றிக்கொண்டு அவர்கள் புறப்பட்டனர்.