நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்!

இந்தியா

இன்று (ஆகஸ்ட் 19) நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக செய்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தி என்பது ஆண்டுதோறும் கிருஷ்ணனின் பிறப்பைக் கொண்டாடுகிற விழாவாக இருக்கிறது. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி திதி) ரோகினி நட்சத்திரம் சேர்ந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த விழா கோகுலஷ்டமி என்று தமிழகத்தில் அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் ராசா லீலா என்று அழைக்கப்படுகிறது.

krishna jayanthi

கிருஷ்ணன் நள்ளிரவில் பிறந்ததாக கருதப்படுவதால் பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளை போல் வீட்டிற்கு வருவது போன்ற காலடி தடங்கள் வீட்டின் வாயிலிருந்து பூஜையறை வரை வரையப்படுகின்றன.

மேலும், கிருஷ்ண ஜெய்ந்தி என்பது சிறு வயது கண்ணனுக்காக கொண்டாடப்படுவதால் சிறுவர்களுக்கு விருப்பான தின்பண்டங்கள் படையலாக வைக்கப்படுகின்றன. கிருஷ்ணனுக்கு விருப்பமான உணவாக கருதப்படும் பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் போன்ற உணவு வகைகளும் படைக்கப்படுகின்றன.

krishna jayanthi

மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ணன் அவதரித்த இடமாக கருதப்படும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுராவில் இன்று கிருஷ்ண ஜெயந்தி மற்ற இடங்களில் கொண்டாடப்படுவதை விட மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

அதிகாலை முதலே அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதில் ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

krishna jayanthi

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கிருஷ்ணன் மற்றும் ராதையாக அலங்கரித்து அழகுபார்ப்பார்கள். இந்த ஆண்டு மதுராவில் ரூ. 500 கோடிக்கு கிருஷ்ணர் ஆடைகள் விற்கப்பட்டுள்ளதாக தையல் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க, போலாந்து, ரஷ்யா, துபாய், உள்ளிட்ட 18 வெளிநாடுகளில் இருந்து ஆர்டர் வந்ததாகவும் தையல் கலைஞர்கள் கூறுகின்றனர்.

கேரளா

கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் மிகச் சிறப்பாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் குருவாயூர் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெல்லை

நெல்லையில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பூஜை முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக ஆயிரக்கணக்கான மண் பானைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த பானைகள் அனைத்திலும் கிருஷ்ணர் உருவப்படம் ஒவியமாக வரையப்பட்டிருந்தது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அருகன்குளத்தில் உள்ள ஸ்ரீ மகாதேவ கிருஷ்ண கோசாலையில் இன்று காலை 5 மணியில் இருந்தே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 1 லட்சம் லட்டுகள் மற்றும் 56 வகையான பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டு படையலிடப்பட்டன.

திருச்சி

திருச்சி, பொன்மலைபட்டியில் உள்ள இஸ்கான் கோவிலில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாலை 5 மணிக்கு விழா கொண்டாடப்பட உள்ளது. பூஜை முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.

கிருஷ்ணரான சிறுவர்கள்

புதுக்கோட்டையில் வைரம் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. இதில் மழலையர் பிரிவு மாணவர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை போல் வேடமணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிறப்பாக கிருஷ்ணர் வேடமிட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

krishna jayanthi

சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கோலாட்டம் ஆடி கொண்டாடினர்.

மோனிஷா

களைகட்டிய மொய் விருந்து: கோடிகளில் வசூல்- எவ்வளவு தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *