வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய இன்றே (டிசம்பர் 31) கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
2023-24-ம் நிதியாண்டுக்குரிய (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) வருமான வரி கணக்கை தனிநபர்கள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைவரும் 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, ஏராளமானோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனர்.
இந்த காலகட்டத்துக்குள் வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனில் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் 1,000 ரூபாயும், ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ரூ.5,000 ரூபாயும் அபராதமாக செலுத்தி வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள் என காலக்கெடு விதிக்கப்பட்டது.
அதன்படி அபராத்துடன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று (டிசம்பர் 31) கடைசி நாள் ஆகும்.
இந்த நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதபட்சத்தில் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும் என்பது குறித்து பேசியுள்ள வருமான வரித் துறையினர், ‘இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள், திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய விரும்புபவர்கள் டிசம்பர் 31-க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து விடுவது நல்லது.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத பட்சத்தில் எதிர்காலத்தில் கடன் வாங்குவதில் சிக்கல் ஏற்படும். பாஸ்போர்ட் பெறுவது, வெளிநாட்டு பயணம் போன்றவற்றிலும் தடைகள் ஏற்படலாம். குற்ற வழக்குகளை சந்திக்க வேண்டியது வரும்’ என்று எச்சரித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: காய்கறி பக்கோடா!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் : இந்தியா சாதனை!