நாப்கின் கேட்ட மாணவியிடம், முகம் சுளிக்க வைக்கும் வகையில் பேசிய பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கூறிய கருத்தினை பலரும் வரவேற்றுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகம் “சஷக்த் பேட்டி, சம்ரித் பீகார்” (அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்) என்ற தலைப்பில் கருத்தரங்கை கடந்த 27ஆம் தேதி நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழக தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பாம்ரா பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அதிகாரியின் அநாகரீக பதில்!
அப்போது மாணவி ஒருவர் ”குறைந்த விலையில், 20 அல்லது 30 ரூபாய்க்கு அரசாங்கம் சானிட்டரி நாப்கின்களை வழங்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு அவருடன் அமர்ந்திருந்த மாணவர்கள் கைதட்டினர்.
இதற்கு ஹர்ஜோத் கவுர், “நாளை அரசாங்கம் ஜீன்ஸ் பேண்டும் தரலாம் என்று கேட்பீர்கள். அதற்குப் பிறகு, ஏன் சில அழகான ஷூக்கள் தரக்கூடாது? என்பீர்கள்.
கடைசியில் அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாடு முறைகள் மற்றும் ஆணுறைகள் ஆகியவற்றைக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பீர்கள்” என்று பதிலளித்தார்.
உயர் அதிகாரியின் இந்த முகம் சுளிக்க வைக்கும் பதிலை கேட்டு அங்கிருந்த மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்!
எனினும், மக்கள் போடும் ஓட்டுகள்தானே அரசாங்கத்தை உருவாக்குகின்றன? என்று மறுபடியும் அந்த மாணவி கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “இது முட்டாள்தனத்தின் உச்சம். அப்படியானால் ஓட்டு போடாதீர்கள்.
பாகிஸ்தான் போன்று மாறுங்கள். நீங்கள் பணத்திற்காகவும் சேவைகளுக்காகவும் ஓட்டு போடுகிறீர்களா?” என்று எதிர்கேள்வி எழுப்பினார் ஹர்ஜோத் கவுர்.
உடனே அந்த மாணவி, “நான் ஏன் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்? நான் ஒரு இந்தியன்.” என்றார்.
அதற்கு ஐஏஎஸ் அதிகாரி ”எதுவாக இருந்தாலும் நீங்கள் அரசாங்கத்திடம் இருந்து ஏன் பெறவேண்டும்?. இந்த சிந்தனையே தவறானது.
உங்கள் தேவையை நீங்களே பூர்த்தி செய்யுங்கள்” என மாணவியை அடுத்த கேள்வி கேட்க கூடாது என்ற தொனியில் கடுமையாக பேசினார்.
பெண் குழந்தைகளுக்கான இந்த கருத்தரங்கில் பெரும்பாலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகள் பங்கேற்ற நிலையில், அநாகரீகமாகவும், கடுமையாகவும் பேசிய ஹர்ஜோத் கவுரின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தின.
ஐஏஎஸ் அதிகாரிக்கு ஐபிஸ் கொடுத்த பதிலடி!
இந்நிலையில் மாணவி மற்றும் ஹர்ஜோத் கவுர் இடையே நடந்த உரையாடல் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை கண்ட பலரும் ஹர்ஜோத் கவுரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் கருத்து பதிவிட்டுள்ளார்.
மாணவி மற்றும் ஐஏஎஸ் ஹர்ஜோத் கவுர் இடையேயான உரையாடலை பதிவிட்டுள்ள அவர், “ஆட்சி, சமூகம், உரிமைகள் பற்றி அதிகாரியை விட பள்ளி மாணவிக்கு நல்ல புரிதல் உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
படிக்கும் மாணவியிடம் பேசுகிறோம் என்ற அடிப்படை தெளிவில்லாமல் முகம் சுளிக்க வைக்கும் வகையில் பேசிய ஐஏஎஸ் அதிகாரி குறித்து, தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பதிவிட்டுள்ள கருத்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
திரித்து பேசுகின்றனர்!
ஆதாரத்துடன் பலரும் ஹர்ஜோத் மீது குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், தனது விபரீத கருத்தினை உணராமல் மீண்டும் பதில் அளித்துள்ளார்.
அவர், ”எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த இதுபோன்ற கீழ்த்தரமான முயற்சிகளில் சிலர் இறங்கியுள்ளனர். நான் பேசியதை திரித்து பதிவிட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்
கிறிஸ்டோபர் ஜெமா
திருக்குறள் ஆன்மீக நூலா?: ஆளுநருக்கு வலுக்கும் கண்டனம்!
எந்த ஊர்வலம், கூட்டத்துக்கும் அனுமதியில்லை : அரசு திட்டவட்டம்!