சுவிட்சர்லாந்தின் டாவோஸில் கடந்த 20ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் உலக பொருளாதார மாநாடு நடைபெற்றது.
இதில் இந்தியாவில் இருந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உட்பட நாட்டின் பல்வேறு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் இந்தியாவுக்கு சுமார் ரூ 20 லட்சம் கோடி முதலீடுகள் கிடைத்த நிலையில், அதில் சுமார் 15.70 லட்சம் கோடி மதிப்புள்ள, 16 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், 61 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) மகாராஷ்டிரா அரசு கையெழுத்திட்டுள்ளது.
இந்த மொத்த முதலீட்டில், சுமார் 98% அந்நிய நேரடி முதலீடு (FDI) வடிவத்தில் வரும் என்றும், நாட்டில் AI துறைக்கு ஒரு சிறந்த சூழலை உருவாக்கும் வகையில் நவி மும்பையில் ஒரு ‘புதுமை நகரத்தை’ உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் மொத்த அந்நிய முதலீட்டில் முக்கால்வாசியை மகாராஷ்டிரா மாநிலமே தட்டிக் கொண்டு சென்றதற்கு பின்னால் தமிழ் ஐஏஎஸ் அதிகாரி உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
ஆம், சத்தியமங்கலத்தில் பிறந்து, 2001ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் பி.அன்பழகன் தான் தற்போது முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கத்தில், தொழில்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் இந்த புதிய பொறுப்பை ஏற்ற நேரம் முதல், தொழில் வளர்ச்சிக்கு அவசியமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். தொழில் அதிபர்களுடன் நேரடி சந்திப்பு, முதலீட்டை பெறுவதில் முனைப்பு என பம்பரமாய் சுழன்று வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளில் மின்சாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு துறை என தொழில் சார்ந்த துறைகளை தலைமையேற்று நடத்தியுள்ளார். மேலும் கொரோனா காலத்தில் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் சிஇஓ – ஆக பணிபுரிந்த இவர், ரூ.10 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈட்டி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.