திருப்பதி ரயில் நிலையத்தை சர்வதேச தரத்தில் ரூ.299 கோடியில் மேம்படுத்த பழைய கட்டடங்கள் இடிக்கும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய உலகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் திருப்பதி ரயில் நிலையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருப்பதி ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் மேம்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்தார்.
அதன்படி ரூ.299 கோடியில் சர்வதேச தரத்தில் புதிய வடிவமைப்புடன் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கியது.
இந்தப் பணிகள் வரும் 2025ஆம் ஆண்டில் முடிவடைந்து புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக திருப்பதி ரயில் நிலையத்தின் முகப்பு மற்றும் நிர்வாக கட்டடம் இடிக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
புதுப்பிக்கப்பட உள்ள ரயில் நிலையத்தில் உலக தரத்துடன் ரயில் பயணிகளுக்கு உட்கட்டமைப்பு, பயணிகள் வசதி உள்ளிட்ட விரிவான வசதிகளுடன் கூடிய ரயில் நிலைய வளாகம் அமைக்கப்பட உள்ளது.
மேலும், அடித்தள நிலை மற்றும் தரை தளத்துடன் மூன்று தளங்களுடன் தெற்கு வாசல் வழி அமைக்கப்பட உள்ளது. தெற்கு நுழைவு வாயிலில் உள்ள அடித்தளத்தில் கார், இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதி, பயணிகள் வளாகம், டிக்கெட் கவுண்டர், ஓய்வறை ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் பொதுவான ஓய்வறை, பெண்கள் ஓய்வறை, சாப்பாட்டு அறை, கழிப்பறைகள், கடிகார அறைகளும் மூன்றாவது தளத்தில் ரயில்வே அலுவலகங்கள் மற்றும் ஓய்வறைகள் ஆகியவை கட்டப்பட உள்ளன. பயணிகளின் தேவைக்கேற்ப 23 லிஃப்ட்கள், 20 எஸ்கலேட்டர்கள், தகவல் காட்சி அமைப்பு, பயணிகள் விவர பதாகை, சிசிடிவி கேமராக்கள், கோச் விவரங்கள், ரயில் தகவல் காட்டி பலகைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்
INDvsNZ: 20 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா
டிஜிட்டல் திண்ணை: அதிமுக பற்றி அண்ணாமலை சைலன்ட்- அடித்து ஆடும் ஸ்டாலின்! தடுத்து ஆடும் எடப்பாடி