உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. இதில் இன்று (செப்டம்பர் 18) முதல் 26ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் வெகு விமரிசையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ விழாவில் இன்று (திங்கட்கிழமை) உற்சவர்களான ஶ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர், விஸ்வகேசவர் முன்னிலையில், கோயிலில் உள்ள தங்கக்கொடி மரத்தில் புதிதாக கொண்டு வரப்பட்ட தர்பை மற்றும் சணல் கயிற்றால் கருடன் சின்னம் பொறித்த பிரம்மோற்சவ கொடி மேளதாளங்கள் முழங்க ஏற்றப்படும்.
பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டதும், ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன், கோயிலின் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து, தலையில் பட்டு வஸ்திரங்களை சுமந்து வந்து சுவாமிக்கு சமர்ப்பிப்பார்.
அதைத் தொடர்ந்து தினமும் சின்ன சேஷ வாகனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், முத்யால பல்லகி வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், கருட வாகனம், ஹனுமந்த வாகனம், ஸ்வர்ண ரதோத்சவம், கஜவாகனம், சூர்ய பிரபை மற்றும் சந்திர பிரபை வாகனம் ஆகிய வாகனங்களில் பெருமாள் காலை மாலை என இரு வேளைகளிலும் வேளைக்கு ஒரு வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
எட்டாம் உற்சவ நாளில் ரதோத்சவம் நடைபெறும். ஒன்பதாம் திருநாளில் சக்ர ஸ்நானம் எனப்படும் தீர்த்தவாரி நடைபெறும். நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போதும் அனைத்து வாகன சேவைகளும் நடைபெறும்.
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
மகளிர் சமூகத்தின் பொற்காலம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி!