திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் விழா சுவாமி மாடவீதி உலா மிகக் கோலாகலமாக நடைபெறும்.
இந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. விழா நாள் நெருங்கி வருவதால் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பக்தர்கள்0 அனுமதிக்கப்படாமல் விழா நடைபெற்றது. இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதியோடு பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது.
இரண்டு ஆண்டுகளாகப் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க முடியாமல் போன பக்தர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மா ரெட்டி கூறியது,
”தொடக்க நிகழ்ச்சியாகச் செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 7 முதல் 8 மணி வரையிலும் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெறும். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 27 ஆம் தேதி மாலை 5.45 மணியிலிருந்து 6.15 கொடியேற்றம் நடைபெறும். இரவு 9 மணியிலிருந்து 11 மணி வரை மாடவீதி உலா நடைபெறும்.
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கொடியேற்ற வைபவத்தில் கலந்து கொண்டு மாநில அரசின் சார்பில் ஏழுமலையானுக்குப் பட்டு துணிகளைச் சமர்ப்பணம் செய்கிறார்.
அதனைத் தொடர்ந்து வழக்கம் போல், விழா நாட்களில் தினந்தோறும் காலை 8 மணியிலிருந்து காலை 10 மணி வரை மற்றும், மாலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலும் மாடவீதி உலா நடைபெறும்.
அக்டோபர் மாதம் 1ம் தேதி இரவு 7 மணிக்குக் கருட சேவை மாலை 7 மணியிலிருந்து அதிகாலை 2 மணி வரையிலும் நடைபெறும்.
அக்டோபர் 5ஆம் தேதியன்று காலை 6 மணியளவில் சக்கரஸ்தான வைபவமும், அன்றிரவு 9 மணியிலிருந்து இரவு 10 மணி வரை கொடியிறக்க வைபவம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், ”விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இலவச தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வி.ஐ.பி, மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்ட சிறப்புத் தரிசனங்கள் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்படாது.
மேலும் கூட்ட நெரிசலில் குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் கண்காணிப்பதற்காகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் வாகன நிறுத்தத்திற்குச் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
மோனிஷா
ஜம்மு-காஷ்மீர் பேருந்து விபத்து:மத்திய அரசு நிவாரணம்!