டெல்லியில் கனமழை பெய்துவரும் நிலையில் இன்று (ஜூன் 28) அதிகாலை விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதன் காரணமாக அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
இந்த நிலையில் நேற்று முதல் அங்கு கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்றும் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் மேற்கூரை இன்று அதிகாலை 5.30 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. அதோடு அதனை தாங்கியிருந்த இரும்பு தூணும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நொறுங்கியது.
இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், அப்பகுதிக்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துள்ள வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலை நடந்த இந்த துயர சம்பவத்தில் இரும்பு தூண்கள் கார்கள் மீது விழுந்ததில் ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சேதமடைந்த வாகனங்களில் வேறு யாரும் சிக்கியுள்ளார்களா என்பதை உறுதி செய்ய மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டெர்மினல் 1 பகுதியில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. செக்-இன் கவுண்டர்களும் மூடப்பட்டுள்ளன.
மேலும் இந்த சம்பவத்தை தனிப்பட்ட கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இடிந்து விழுந்த டெல்லி விமான நிலைய முதல் முனையத்தை நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு சற்று முன்னதாக கடந்த மார்ச் மாதம் தான் பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
10.5% இட ஒதுக்கீடு கோரி மாநிலம் தழுவிய போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு!