கேரளாவில் கொட்டும் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வீடு ஒன்று முழுவதுமாக மண்ணில் புதைந்தது. இதில் இரண்டு பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்ற குடும்ப உறுப்பினர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில தினங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாகக் கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டாவில் உள்ள பல பகுதிகள் வெள்ளக் காடாகக் காட்சி அளிக்கின்றன.
குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கோட்டயம், கருகாச்சலில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நெடுமண்ணி பாலம் நீரில் மூழ்கியுள்ளது. பாம்பாற்றில் குட்டிக்கல் பகுதியில் உள்ள கால்வாய் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில், இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள குடையத்தூர் பகுதியில் அதிகாலை 4.15 மணியளவில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் மாலியக்கல் காலனியில் இருந்த சிட்டடிச்சலி சோமன் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணில் புதைந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும் மீட்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்கட்டமாகச் சோமனின் தாய் தங்கம்மா மற்றும் மகள் ஷிமாஸ் மகன் தேவானந்த் (4) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மோப்ப நாய், ஜேசிபி இயந்திரத்துடன் மீட்கும் பணியில் உள்ளூர் மக்கள், போலீசார், மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வீடு முற்றிலுமாக இடிந்து மண்ணில் புதைந்துள்ளதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகச் சம்பவ இடத்தில் உள்ள போலீசார் கூறுகின்றனர்.
பிரியா
நொய்டா இரட்டை கோபுரம் இடிப்பு: குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்!