ஆப்பிரிக்கா நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை நோயை உலகளாவிய சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்த தொற்று கொரோனாவை போல பெருந்தொற்றாக மாறுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மனிதர் அல்லது விலங்குகளிடம் இருந்து, நேரடி தொடர்பு மூலம் பரவும் தன்மை கொண்ட இந்த தொற்றின் பரவல், முதலாவதாக ஆப்பிரிக்க நாடுகளில் உறுதி செய்யப்பட்டது. புருண்டி, கமரூன், மத்திய ஆப்பிரிக்கா குடியரசு, காங்கோ குடியரசு, கோடே டி’இவோய்ரே, காங்கோ ஜனநாயக குடியரசு, கானா, லைபீரியா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தென் ஆப்பிரிக்கா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இந்த ஆண்டு குரங்கு அம்மை நோய் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் ஒருவருக்கும், ஆசிய நாடுகளான பாகிஸ்தானில் 4 பேருக்கும், பிலிப்பைன்ஸில் ஒருவருக்கும் குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், “குரங்கு அம்மை நோய் கொரோனாவை போல பெருந்தொற்றாக மாறாது. இதன் பரவல் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றே”, என ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரங்கு அம்மை நோய் கட்டுப்படுத்த வேண்டும்”, என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களில் இந்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள 32 பரிசோதனை மையங்களை தயார் நிலையில் இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
சொறி, காய்ச்சல், தொண்டை புண், தலைவலி, தசை வலி, முதுகு வலி, உடல் பலவீனம், வீங்கிய நிணநீர் முனைகள் ஆகியவை குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிகுறிகள் தொற்றால் பாதித்த முதல் நாளில் இருந்தே உடலில் தென்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், முதலில் காய்ச்சல், தொண்டை புண், தசை வலி ஆகிய அறிகுறிகளே தென்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நேரடி தொடர்பின் மூலமாக மட்டுமே இந்த தொற்று பரவும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மகப்பேறு பெண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டவர்கள் இந்த தொற்றால் தீவிர பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, தொற்றால் பாதித்த உடனே முறையாக சிகிச்சை பெற்றால், 4 வாரங்களில் பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இதற்கிடையில், இந்த அறிகுறிகளுடன் யாரேனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், உடனடியாக அவர் தனிப்படுத்தப்பட வேண்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
விஜய் – பாஜக கூட்டணி : ஹெச். ராஜா சொன்னது என்ன?
வங்கதேச வன்முறையால் இடம்மாறும் மகளிர் டி20 உலகக்கோப்பை!