100 கோடி ரூபாய் பணம் கேட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்திய அமைச்சரவையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினராகவும் உள்ளார்.
நாக்பூரில் உள்ள நிதின் கட்கரியின் மக்கள் தொடர்பு துறையின் தொலைபேசி எண்ணை அழைத்த மர்ம நபர் ஒருவர் தன்னை தாவூத் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
100 கோடி ரூபாய் அமைச்சரின் உயிருக்கு விலை, அதனை தரவில்லை என்றால் அமைச்சர் கொலை செய்யப்படுவார் என மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்துள்ளார்.
நேற்று இரவு 11.30 , 11.40 மற்றும் இன்று காலை ஒரு அழைப்பு என மூன்று அழைப்புகள் இதேபோல வந்துள்ளதாக நாக்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவிலிருந்து மிரட்டல் வந்திருப்பதை போலீஸார் கண்டுபிடித்திருக்கின்றனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் இருந்துகொண்டு, இந்தியாவில் இருப்பவர்களிடம் மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற வேலைகளை தன்னுடைய அடியாட்கள் மூலம்,
தாவூத் இப்ராஹிம் செயல்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில் அமைச்சருக்கு இப்படியொரு அழைப்பு வந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நிதின் கட்கரிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
கலை.ரா
மனிதக்கழிவு கலந்த விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது வழக்கு!
டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தில் மீண்டும் சோதனை : மறுக்கும் சிபிஐ