மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட்டில் ஒரு திருடன், தான் திருடிய வீடு பிரபல மராத்தி கவிஞருடையது என்பதை அறிந்ததும், மனம் வருந்தியதோடு, அங்கு திருடிய பொருட்களை திருப்பிக் கொண்டுவந்து வைத்த சம்பவம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல மராத்தி கவிஞர் நாராயண் சுர்வே. இவர் சமூக ஆர்வலரும் ஆவார். மும்பையில் பிறந்து வளர்ந்த நாராயண் சுர்வேவின் கவிதைகள், நகர்ப்புறத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களைத் தெளிவாக சித்தரிப்பதாக இருந்தன.
கவிஞர் சுர்வே புகழ்பெற்ற மராத்தி கவிஞராக மாறுவதற்கு முன்பு, அவர் மும்பையின் தெருக்களில் ஓர் அநாதையாக வளர்ந்தார்.
பின்னர் வீட்டு உதவியாளராக, ஹோட்டலில் பாத்திரம் கழுவுபவராக, குழந்தை பராமரிப்பாளராக, வளர்ப்பு பிராணி பராமரிப்பாளராக, பால் விநியோகிப்பவராக, போர்ட்டராக, தொழிற்சாலை ஊழியராக என பல்வேறு வேலைகளை செய்து பிழைத்தார்.
தனது கவிதைகள் மூலம், சுர்வே உழைப்பை மகிமைப்படுத்தினார். மேலும், மராத்தி இலக்கியத்தில் நிறுவப்பட்ட இலக்கிய விதிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் சுர்வே தனது கவிதைகளை இயற்றினார்.
புகழ்பெற்ற இவர் தனது 84 வயதில் கடந்த 2010 ஆகஸ்ட் 16-ம் தேதி அன்று இறந்தார். இந்த நிலையில் ராய்காட் மாவட்டத்தின் நெரல் பகுதியில் உள்ள கவிஞர் சுர்வேவின் வீட்டில் தற்போது அவரின் மகள் சுஜாதாவும், அவரின் கணவர் கணேஷ் கரேவும் வசித்து வருகின்றனர்.
இந்தத் தம்பதியினர் வெளியூர் சென்றிருந்ததால், கடந்த 10 நாட்களாக இவர்களது வீடு பூட்டிக்கிடந்தது. வீடு தொடர்ச்சியாக பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட திருடன், கவிஞர் சுர்வேவின் வீட்டுக்குள் புகுந்து ‘எல்இடி டிவி’ உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றார்.
இந்த நிலையில் மறுநாள் அந்த வீட்டுக்குள் மேலும் சில பொருட்களை திருடச் சென்றபோது, ஓர் அறையில் கவிஞர் சுர்வேயின் புகைப்படத்தையும், நினைவுச் சின்னங்களையும் திருடன் கவனித்துள்ளார்.
தான் திருடியது புகழ்பெற்ற கவிஞரின் வீட்டில் என்பதை அறிந்ததும், திருடன் மனம் வருந்தினார். மேலும், தான் திருடிச் சென்ற பொருட்கள் அனைத்தையும் திருப்பி கொண்டுவந்து வைத்ததோடு, அதுகுறித்த சிறு குறிப்பு ஒன்றை எழுதி வீட்டு சுவரில் ஒட்டினார்.
நேற்று முன்தினம் (ஜூலை 15) மகள் சுஜாதாவும், அவரின் கணவரும் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, இந்தக் குறிப்பை கண்டு நெரல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ‘எல்இடி டிவி’ உள்ளிட்ட மதிப்புமிக்க இதர பொருட்களில் பதிந்துள்ள திருடனின் கைரேகைகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: வழுக்கைத் தலைமுடி வளர… சின்ன வெங்காயம் உதவுமா?
டாப் 10 நியூஸ்: மொஹரம் பண்டிகை முதல் தங்கலான் பாடல் ரிலீஸ் வரை!
ஹெல்த் டிப்ஸ்: குழந்தை பிறப்புக்குப் பிறகு செக்ஸ் ஆர்வமின்மைக்குக் காரணம் என்ன?