அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா நாளை (ஜனவரி 22) நடைபெறும் நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அரை நாள் மற்றும் முழு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் நாளை ராமர் கோயில் பிரதிஷ்டை விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் ‘பிராண்- பிரதிஷ்டா’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு துறவிகள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்பட பல ஆயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பல மாநில அரசுகளும் பொது விடுமுறை அல்லது அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளன. அதன்படி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜனவரி 22 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார். அன்றைய தினம் அம்மாநிலத்தில் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் ராமர் கோயிலின் பிரதிஷ்டை விழாவை கொண்டாடும் வகையில் ஜனவரி 22 அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கள்கிழமை அன்று மதியம் 2.30 மணி வரை மூடப்படும் என அறிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள் பிற்பகல் 2:30 மணி வரை அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதுபானக் கடைகளும் மூடப்படும்.
ஹரியானாவில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதுடன் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மதியம் 2:30 மணி வரை அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது..
அசாம் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பிற்பகல் 2.30 மணி வரை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் அனைத்து அரசு அலுவலகங்களும் பிற்பகல் 2:30 மணி வரை அரை நாள் மூடப்படும். அதே நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு முழு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசு ஜனவரி 22-ம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகர், புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் ஜனவரி 22 அன்று முழு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு, நாளை பங்குச்சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: தினமும் சூப் குடிப்பது நல்லதா, கெட்டதா?
கோயிலா? மருத்துவமனையா?: அப்டேட் குமாரு
நேரு – உதயநிதி போட்ட ரூட் : திமுக மாநாட்டு ஏற்பாடுகள் – பந்தல் சிவா பேட்டி!
13 ஆண்டுகளுக்கு பின் தனுஷுடன் இணையும் ராக் ஸ்டார்!