”பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை” என 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இன்று (ஆகஸ்ட் 1) அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர், கடந்த 2009ஆம் ஆண்டு பட்டியல், பழங்குடியினருக்கான 18% இட ஒதுக்கீட்டில், அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதற்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிபதி ஈ.வி.சின்னையா, ’தமிழ்நாடு அரசு வழங்கிய அனுமதி செல்லாது’ என தீர்ப்பு வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு போன்று பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுதொடர்பான 20 மேல்முறையீட்டு மனுக்களை ஒரே வழக்காக கடந்த 2020ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி மாதத்துடன் விசாரணை அனைத்தும் முடிவுற்ற நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பேலா எம். திரிவேதி, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது.
அதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உட்பட 6 பேர், ’பட்டியலினத்தவர்- பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநிலங்களுக்கு உரிமை உண்டு’ என்பதை உறுதி செய்தனர்.
மேலும் அவர்கள் வழங்கிய தீர்ப்பில், ”பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் ஒரு தரப்பு மட்டுமே பலன்களை அனுபவித்தால் அதில் மாநில அரசுகள் தலையிட முடியும்.
தமிழ்நாட்டில் அருந்ததியருக்கான 3% உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது” என அதிரடியாக தீர்ப்பளித்தனர்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது தீர்ப்பில், பட்டியல் சாதிகளில் ஒரே மாதிரியான வர்க்க நிலை இல்லை என்று கூறிய வரலாற்று ஆதாரங்களை குறிப்பிட்டார். மேலும் ’உள் ஒதுக்கீடு அரசியலமைப்பின் 14 வது பிரிவின் கீழ் உள்ள சமத்துவக் கொள்கையை குறிக்கும் 341(2) பிரிவை மீறாது’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதி பி.ஆர்.கவாய் தனது தீர்ப்பில், ”மிகவும் பின்தங்கிய சமூகங்களுக்கு முன்னுரிமை அளிப்பது அரசின் கடமை. SC/ST பிரிவில் உள்ள ஒரு சிலரே இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகின்றனர். இந்த அடிப்படை உண்மையை மறுக்க முடியாது.
மேலும் பல நூற்றாண்டுகளாக அதிக ஒடுக்குமுறையை எதிர்கொண்ட SC/STகளுக்குள் பிரிவுகள் உள்ளன.
அவற்றில் பெரிய குழுவிலிருந்து ஒரு குழு அதிக பாகுபாடுகளை எதிர்கொள்கிறது என்பதே உள் ஒதுக்கீட்டிற்கான அடிப்படையாகும்.
எஸ்சி/எஸ்டி பிரிவினரிடையே பொருளாதார சூழலை கண்டறிந்து, அவர்களை வெளியேற்றுவதற்கான கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். இதுதான் உண்மையான சமத்துவத்தைப் பெறுவதற்கான ஒரே வழி” என நீதிபதி கவாய் கருத்து தெரிவித்தார்.
எனினும் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி பேலா திரிவேதி மட்டுமே மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.
அவர், “341வது பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்ட பட்டியல் சாதியினரின் ஜனாதிபதி பட்டியலை மாநிலங்களால் மாற்ற முடியாது. பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் மட்டுமே சாதிகளை ஜனாதிபதி பட்டியலில் சேர்க்கவோ அல்லது விலக்கவோ முடியும். துணை வகைப்பாடு என்பது ஜனாதிபதி பட்டியலை டிங்கரிங் செய்வதாகும். 341வது பிரிவின் நோக்கம் SC-ST பட்டியலில் உள்ள அரசியல் காரணிகளை அகற்றுவதாகும்” என்று பேலா திரிவேதி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.