ரயில் கட்டணத்தில் ஒவ்வொரு பயணிக்கும் 46% மானியம் வழங்கப்படுகிறது. இதில் சீனியர் சிட்டிசன்கள் உட்பட அனைத்து பிரிவினருமே அடங்குவர் என்று மத்திய ரயில்வே அமைச்சர் கூறியுள்ளதால் சீனியர் சிட்டிசன்களுக்கான ரயில் கட்டணச் சலுகை மீண்டும் வர வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது.
இந்தியாவில் ரயில்களில் பயணம் செய்யும் சீனியர் சிட்டிசன்களுக்கு முதுமையைக் கருத்தில் கொண்டு பயணக் கட்டணத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு அனுமதிக்கும் நடைமுறை நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்தது.
இந்தப் பயணக் கட்டணச் சலுகையால் நாடு முழுக்க லட்சக்கணக்கான முதியவர்கள் பலன் பெற்று வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு கோவிட் தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியபோது மக்களின் நகர்வுகளை தடுக்கும் விதமாக லாக்டவுன் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட மத்திய அரசு, சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில்வே வழங்கி வந்த அந்தக் கட்டணச் சலுகையை ரத்து செய்து உத்தரவிட்டது.
பின்னர் தடுப்பூசிகள் மூலம் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு, முன்னெச்சரிக்கையாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட போதும் இந்த சீனியர் சிட்டிசன் கட்டணச் சலுகை குறித்து மட்டும் அரசு எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், நேற்றைய நாடாளுமன்ற அலுவல் நேரத்தில் இது தொடர்பாக கேள்வி ஒன்றை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எழுப்ப, அதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
‘இந்திய ரயில்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
அதாவது ஒரு பயண சேவை வழங்குவதற்கான கட்டணம் 100 ரூபாயாக இருந்தால் பயணியிடம் 54 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
எனவே ஒவ்வொரு பயணிக்கும் 46%மானியம் வழங்கப்படுகிறது. இதில் சீனியர் சிட்டிசன்கள் உள்பட அனைத்து பிரிவினருமே அடங்குவர்’ எனக் கூறியுள்ளார் ரயில்வே அமைச்சர்.
இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர்,
“சமூகத்தின் அனைத்து அடுக்குகளுக்கும் மலிவு விலையில் சேவைகளை வழங்க இந்திய ரயில்வே பாடுபடுகிறது.
2022-23 -ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு 56,993 கோடி ரூபாய் மானியம் வழங்கியது. ரயில்களில் இந்த மானியம் தொடர்கிறது.
ஆனால், மேற்கொண்டு மூத்த குடிமக்கள், பத்திரிக்கையாளர்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக எந்த பரிசீலனையும் அரசிடம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சர் இப்படிப் பதில் தந்திருப்பதால் சீனியர் சிட்டிசன்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகை மீண்டும் வர வாய்ப்பே இல்லை என்றுதான் தெரிகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு சப்பாத்தி
இதெல்லாம் வெளியில சொன்னா சிரிச்சிருவாங்க… அப்டேட் குமாரு