4 மாநிலங்கள்… 29 செல்போன் டவர் கொள்ளையர்கள்… தமிழ்நாடு போலீஸின் ‘பான் இந்தியா’ ஆபரேஷன்!

Published On:

| By Kavi

திடீர் என நமது செல்போனின் நெட் வொர்க் நரம்புகள் அறுந்துபோகும். முக்கியமான அழைப்புகளை மேற்கொள்ள வேண்டிய நேரத்தில்  நெட்வொர்க் கட்வொர்க் ஆனதால் நம்மில் பலரும் பல வகையிலும் பாதிக்கப்பட்டிருப்போம். சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனங்களைத் திட்டித் தீர்த்திருப்போம்.

ஆனால், வாடிக்கையாளர்களுக்கும் நெட்வொர்க் நிறுவனத்தாருக்கும் இடையே, ஒரு தில்லுமுல்லு நெட்வொர்க் நடந்திருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்?  இதுவரையில் பலரும் கேள்விப்பட்டிராத அந்த  தில்லுமுல்லு நெட்வொர்க்கைதான் தமிழ்நாடு போலீஸார் திட்டம் போட்டு -வட்டம் போட்டு ஒட்டுமொத்தமாக கட் செய்திருக்கிறார்கள்.

ஆம்… தமிழகத்தில் உள்ள பல்வேறு செல்போன் டவர்களில் பொருத்தப்பட்ட மிக முக்கியமான சாதனங்களை தொடர்ந்து திருடி வந்த  தமிழக, வடமாநில கும்பலைத்தான் தமிழக போலீசார்  அக்டோபர் 21  ஆம் தேதி இரவு கைது செய்துள்ளனர்.

‘பான் இந்தியா’ சினிமா போல பல மாநிலங்களிலும் ஒரே நேரத்தில்  மேற்கொள்ளப்பட்டிருக்கிறது,  இந்த முக்கியமான ஆக்‌ஷன்.

தமிழகத்தில் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் போன்ற செல்போன் டவர்கள் ஏராளமாக உள்ளன. இந்த டவர்களில் RRU (Radio Remote Unit – ரேடியோ ரிமோட் யூனிட்) என்ற சாதனமும், BBU (Broadband unit) என்ற சாதனமும் பொருத்தப்பட்டிருக்கும்.

தொலைத் தொடர்பு கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் ரேடியோ ரிமோட் யூனிட் என்பது செல்போன் போன்ற பயனர் உபகரணங்களுடன் ஆபரேட்டர் நெட்வொர்க்கை இணைக்கும் சாதனமாகும். தொலைத் தொடர்புகளில் டிரான்சீவராகப் பயன்படுத்தப்படுகிறது. நாம் பேசும் ஒலியை வாங்கி எதிரில் பேசுபவருக்கு கொடுக்கும்.

இந்த RRU கருவியின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை இருக்கும். பிராட்பேன்ட் யூனிட் கருவியின் மதிப்பு ரூ.1  லட்சம் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.

அதன்படி, சுமார் 3 முதல் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த இரண்டு கருவிகளும்  எல்லா செல்போன்  டவர்களிலும் பொருத்தப்பட்டிருக்கும்.

இவ்வாறான விலைமதிப்புடைய கருவிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக திருடப்படுவது தொடர் கதையாகி வந்தது. இதுகுறித்து நெட்வொர்க் நிறுவனங்கள் பல புகார்களை  போலீஸிடம் அளித்திருக்கின்றன.

இந்த நிலையில் தான், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எடுத்த நடவடிக்கையின் காரணமாக  இந்த கொள்ளையில் தொடர்புடைய தமிழகம் மற்றும்  வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் கூண்டோடு பிடிபட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது,

“வட இந்திய கும்பல் இங்குள்ள சிலரின் உதவியோடு  தமிழகத்தில் உள்ள செல்போன் டவர்களை குறிவைத்து அதன் சாதனங்களை திருடி வந்தது.

அந்த சாதனங்கள் திருடப்பட்ட பின்,  அந்த பகுதியில் இருக்கும் செல்போன் பயனர்களுக்கு அழைப்புகளும் வராது. அழைப்புகளை மேற்கொள்ளவும் முடியாது. இணைய சேவையும் பாதிக்கப்படும். அப்போதுதான் நாம் நெட்வொர்க்குகளைத் திட்டித்  தீர்ப்போம்.

பொதுமக்களுக்கு ஏற்படும் இடைஞ்சல் ஒருபக்கம் என்றால்… இதனால் இன்னொரு முக்கியமான  பாதிப்பு போலீசாருக்கும் உண்டு.  அதாவது அந்த பகுதியில் திருட்டு சம்பவம் உள்ளிட்ட  குற்றங்கள் நடந்தால், காவல்துறையினரால் கால் டீடெய்ல்ஸ் எடுக்கவும், லொகேஷன் பார்க்கவும் முடியாது. முக்கிய குற்றங்களை மறைக்கவும் கூட இது உதவி விடும்.

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட  செல்போன் டவர்களில்  முக்கிய சாதனங்கள் திருடு போனதால் பல இடங்களில் நெட்வொர்க் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான்…  மூன்று மாதங்களுக்கு முன்பு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவியேற்ற டேவிட்சன் தேவாசீர்வாதம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தார். அதாவது    மண்டல ஐஜி-க்கள், மாநகர காவல் ஆணையர்கள், டிஐஜி-க்கள், எஸ்.பி.க்களுக்கு  செல்போன் டவர் உதிரிபாகங்கள் திருடுபோவது குறித்த விவரங்களை கேட்டார்.

தமிழகம் முழுவதும் இந்த விவகாரத்தில் சுமார்  300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பதையும் தொடர்ந்து ஆங்காங்கே செல்போன் டவர் உதிரி பாகங்கள் திருடுபோவதையும் அறிந்து, அதிர்ந்துபோனார் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்.   உடனடியாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கை தொடர்பு கொண்டு பேசினார்,

‘ஒரு குரூப் செல்போன் டவர்களை குறித்துவைத்து தொடர்ந்து திருடி வருகிறார்கள். அவர்களை கூண்டோடு கைது செய்ய வேண்டும். தொடர் திருட்டை தடுக்க வேண்டும். அதற்காக சிறப்பு கவனம் எடுத்து செயல்படுங்கள்’ என உத்தரவிட்டார்.

இதையடுத்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் சுமார் 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததை கண்டறிந்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்தந்த எஸ்.பி தலைமையில் சிறப்பு டீம் அமைத்தார்.

முதலில் குற்றவாளிகளையும் அவர்களது தொடர்புகளையும் கண்டறிந்து ஒரே நேரத்தில் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். ஏனென்றால் ஒரு கும்பலைக் கைது செய்தால் மற்ற கும்பல் விழித்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடக் கூடாது என்பதால்தான்… அனைவரையும் ஒரே நேரத்தில், ‘தூக்க’ வேண்டும் என்று திட்டமிட்ட்டார் அஸ்ரா கர்க்.  இதற்காக  கடந்த இரண்டு மாதமாக துப்பறியும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

செங்கல்பட்டு டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில், காவல் ஆய்வாளர் லட்சுமிபதி, பாபு, பேசில் உள்ளிட்ட சுமார் 30 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் புலனாய்வு விசாரணைக்காக இறக்கிவிடப்பட்டது.

இவர்கள் கடந்த 40 நாட்களாக தொழில்நுட்ப ரீதியாகவும்,   போலீஸாரின் நுண்ணறிவு  மூலமாகவும் யார் யார் குற்றவாளிகள், எந்தெந்த மாநிலம், எங்கெங்கு இருக்கிறார்கள் என்று தீவிரமாக விசாரித்தனர்.

இந்த நிலையில்,  உத்திரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட  மாநிலங்களில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களைக் கைது செய்வதற்கு  கூடுதலாக காஞ்சிபுரம் எஸ்.பி.சண்முகம், விழுப்புரம் எஸ்.பி தீபக் சிவாச், ராணிப்பேட்டை எஸ்.பி. கிரன் ஸ்ருதி, திருவண்ணாமலை எஸ்.பி சுதாகர் என நான்கு எஸ்.பி.க்கள்  மேற்பார்வையில் தனித்தனி டீம்கள்  அமைக்கப்பட்டன.

கடந்த  21 ஆம் தேதி இரவு, இந்த  கும்பலைக் கைது செய்வதற்கு ’முகூர்த்தம்’ குறிக்கப்பட்டது. வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான இந்த ஆபரேஷனில்   உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காமீல், சும்செத், முகமது அபித்,  டெல்லியைச் சேர்ந்த நதீம் மாலிக் உட்பட  மொத்தம் 29 பேர்  21 ஆம் தேதி முன்னிரவு தொடங்கி பின்னிரவுக்குள்  கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து பல  மாநிலங்களில் கொள்ளையடிக்கப்பட்ட  தொலைத்தொடர்பு கருவிகள் கைப்பற்றப்பட்டன. இதில் தொடர்புடைய மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று இந்த  கள்ள நெட்வொர்க்கை கட் செய்த ஸ்டோரியை  கூறினார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

மேலும் அவர்கள், “இப்படி திருடிச் சென்று விற்பவர்களிடம் Broadband unit சாதனத்தை வாங்கி தீவிரவாதிகளாலும் பயன்படுத்த முடியும். அதில் உள்ள கோட் வோர்டை மாற்றி இணைய தகவல்களை திருடி சமூக விரோத செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது” என்ற பகீர் தகவலையும் கூறினர்.

கைதானவர்களிடம் போலீஸ் விசாரித்ததில், எலெக்ட்ரானிக் வேஸ்ட் ஸ்கிராப் செய்யும் நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு டவர் தொடர்பான பழுதுகளை சீர்செய்வது போல் சென்று கருவிகளை திருடியது தெரியவந்துள்ளது.

“இந்த வழக்கில் எங்களை முழுமையாக ஆலோசனை கொடுத்து வழிநடத்தியவர் ஐஜி அஸ்ரா கார்க்தான். முதலில் திருடுபோன பகுதியில்  ’கால்  தம்’ போடப்பட்டு அந்த பகுதியில் இருந்து சென்ற, வந்த அனைத்து அழைப்புகளையும் பட்டியலிட்டு… அதில் புதிய, அரிதான அழைப்புகளை  மேற்கொண்ட  நபர்களின் கால் டீடெய்ல்ஸை எடுத்துப் பார்த்தோம்.

அந்த பகுதிகளில் உள்ள செல்போன் டவர்களில்  யார் யார்  சர்வீஸ்  செய்யக்கூடியவர்கள்  என்று விசாரித்தோம். இதில் ரிக்கர் என்ற கம்பெனி சர்வீஸ் செய்து வந்தது தெரியவந்தது. அந்த கம்பெனியில் தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் யார் யார் சர்வீஸ் செய்து வருகிறார்கள் என்ற விபரங்களை எடுத்தோம்.

அதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த முனுசாமி தலைமையில் ஒரு டீம் திருட்டில் ஈடுபட்டதும், அவர்களிடமிருந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஷமீல் மற்றும் அவரது சகோதரர் ஷகில் சாதிக் சைபி ஆகியோர் திருடப்பட்ட கருவிகளை வாங்கி டெல்லிக்கும், உத்தரப்பிரதேசத்துக்கும் அனுப்பியுள்ளதும் தெரியவந்தது.

இவர்களிடமிருந்து டெல்லியைச் சேர்ந்த காமில், சம்சுதீன், ஹாபித் முகமது ஆகியோர் இந்த கருவிகளை வாங்கி வெவ்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும்  அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், தமிழ்நாடு, டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் குற்றவாளிகள் உள்ள அனைத்து இடங்களுக்கும் தனி தனி டீமை அனுப்பி போலீசார் தயார் நிலையில் இருந்தனர். கடந்த 21ஆம் தேதி இரவு குறிப்பிட்ட  ஒரே நேரத்தில் 29 குற்றவாளிகளை கைது செய்தோம்”  என்றார்கள்.

சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு நடைபெற்ற இந்த விஞ்ஞான ரீதியான கொள்ளையை,  தமிழக போலீசார் கச்சிதமாக விசாரித்து  கொள்ளையர்களை வேட்டையாடியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

அவ்ளோதான் முடிச்சிவிட்டீங்க போங்க… அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: ஆபரேஷன் ‘வை’யண்ணா… அதிமுகவுக்குள் E.D. ஆட்டம் ஆரம்பம்!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share