எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு!

இந்தியா

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 9) உத்தரவிட்டுள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளில் 2 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடையுள்ளது.

இந்த 6 ஆண்டு தடையை வாழ்நாள் தடையாக விதிக்க வேண்டும், அதாவது குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விரிவாக விசாரிப்பது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை வகுப்பது கடினம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் சில வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கினர்.

“எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்குகளை திறம்பட கண்காணித்து தீர்ப்பு வழங்குவதற்கு தாமாக முன்வந்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வு அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பெஞ்ச் விசாரிக்கலாம்.

தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமர்வு தேவையை கருதி குறிப்பிட்ட இடைவெளியில் வழக்கை பட்டியலிடலாம். வழக்குகளை விரைவாகவும் திறம்படவும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு தேவையான உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் உயர்நீதிமன்றம் பிறப்பிக்கலாம். நீதிமன்றத்திற்கு உதவ அட்வகேட் ஜெனரல் அல்லது வழக்கறிஞர்களை நியமிக்க சிறப்பு அமர்வு பரிசீலிக்கலாம்.

மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி.க்கள்/எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகள், 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த வழக்குகளை தவிரக்கமுடியாத காரணங்களுக்காக தவிர வேறு எதற்கும் ஒத்திவைக்கக்கூடாது.

எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருக்கும் வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.

விசாரணை நீதிமன்றத்துக்கு தொழில்நுட்பம் உள்ளிட்ட போதுமான உள்கட்டமைபை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

வழக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் அதன் நிலை பற்றிய விவரங்களை அறிய மாவட்ட வாரியாக வழங்கும் இணையதளத்தில் உயர் நீதிமன்றம் தனி டேப் (tab) ஏற்படுத்தித் தர வேண்டும் என நீதிபதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

பிரியா
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0